உப்பு நீரால் உடல்நலம் பாதிப்பு சுகாதாரமான குடிநீர் வேண்டும்

*குமாரபுரம் கிராமமக்கள் மனு

விருதுநகர் : விருதுநகர் அருகே கால்சியம் கலந்த உப்பு நீரை பருகியதால் 12 பேருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.விருதுநகர் அருகே கன்னிசேரி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட குமாரபுரம் கிராமமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.

கலெக்டர் சுகபுத்ராவிடம் அளித்த மனுவில், ‘‘குமாரபுரம் கிராமத்தில் சுமார் 120 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் மூலம் எடுக்கப்படும் தண்ணீரானது, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு, அங்கிருந்து வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. கால்சியம் கலந்த இந்த உப்பு தண்ணீரை பொதுமக்கள் பருகி வந்தனர்.

இதனால், கடந்த ஓராண்டில் மட்டும் 30க்கும் மேற்பட்டோருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் செய்யும் நிலை ஏற்பட்டது. அதில் 8 பேர் உயிரிழந்திருந்தனர். தற்போது 12 பேர் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து செய்தி தினகரன் நாளிதழில் அண்மையில் வெளிவந்தது. இதையடுத்து மருத்துவ குழுவினர், குமாரபுரம் கிராமத்தில் முகாமிட்டு சிகிச்சை மேற்கொண்டனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான குழாய் குமாரபுரத்தில் பதிக்கப்பட்டது. ஆனால், குடிநீர் வரவில்லை. எனவே, சுகாதாரமான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

இதில், குமாரபுரம் கிராம மக்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் ஊர்காவலன், மார்க்சிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றிய செயலாளர் நேரு, நகர் செயலாளர் ஜெயபாரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: