விருதுநகர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி காலை உணவு வழங்கும் திட்டம்

*அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் 2,639 தூய்மை பணியாளர்களுக்கு தினசரி காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்தார். அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

கலெக்டர் சுகபுத்ரா முன்னிலை வகித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

மேலும் தூய்மை பணியாளர்கள் காலை உணவு கொண்டு செல்வதற்காக ஒவ்வொருவருக்கும் இரண்டு பையுடன் கூடிய டிபன் பாக்ஸ்களையும் அமைச்சர் வழங்கினார். அதோடு காலையில் உணவு வழங்கும் தனியார் ஒப்பந்தகாரரை அழைத்து இன்று எப்படி உணவு உள்ளதோ இதேபோல எப்போதும் தூய்மை பணியாளர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:

நம்முடைய தமிழக முதலமைச்சர் தாய்மை உணர்வோடு, மக்களாக இருந்தாலும் சரி அவர்களுக்காக பணி புரியும் தூய்மை பணியாளர்களாக இருந்தாலும் சரி வயிறு நிரம்பி இருக்க வேண்டும், பசியால் தமிழ்நாட்டில் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தோடு தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.

அந்தத் திட்டத்தின்படி நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் வருடத்திற்கு ரூ.2,15,97,540 செலவில் சிவகாசி மாநகராட்சி உட்பட மொத்தம் 2,639 தூய்மை பணியாளர்களுக்கு, தினசரி உணவு வழங்க இருக்கிறோம். அருப்புக்கோட்டை நகராட்சியில் மட்டும் 391 நபர்களுக்கு வருடத்திற்கு 5,48,96,440 ரூபாய் செலவிடப்படுகிறது. அதுவும் அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் உத்தரவுபடி காலை உணவு திட்டம் சரியான முறையில் இயங்குகிறதா என்பதை நம்முடைய நகராட்சி ஆணையாளர் சரிபார்க்க வேண்டும். அருப்புக்கோட்டை நகராட்சியில் மொத்தம் எட்டு இடங்களில் உணவுகளை பிரித்து வழங்க இருக்கிறோம். தூய்மை பணியாளர்கள் அங்கேயே உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு பணிக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம்.

அதேபோல நானும் கலெக்டரும் வரும்போது இந்த திட்டத்தினை ஆய்வு செய்வோம். தூய்மை பணியாளர்களின் பொருளாதார நலனை பாதுகாக்கும் வகையிலும் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையிலும் முதலமைச்சர் இந்த திட்டத்தை துவக்கியுள்ளார். தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டம் வழங்குவதற்காக ஒவ்வொருவருக்கும் இரண்டு டிபன் பாக்ஸ்களும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி, மண்டல செயற்பொறியாளர் சனல் குமார், நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி, நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம், நகராட்சி பொறியாளர் அபுபக்கர்சித்திக், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ், நகர திமுக செயலாளர் ஏ.கே.மணி, நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: