பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை விவகாரம் தவெக வேட்பாளரின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி பெண் மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளர் பிரகாசத்துக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் பிரகாசம் என்கிற குட்டி சில மாதங்களுக்கு முன் திருவள்ளூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது, அங்கிருந்த மகளிர் அணி நிர்வாகி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தவெக தலைமைக்கு புகார் கொடுத்தபோது நடவடிக்கை எடுப்பதாக கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தனது கணவருடன் சென்று பாலியல் சீண்டல் அளித்த பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த பெண் புகார் கொடுத்திருந்தார். அவர் புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் நகர் போலீசார் பிரகாசம் மீது 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளராக பிரகாசம் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, பிரகாசத்திற்கு தரப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி புகார் அளித்த பெண் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் வேட்பாளருக்கு எதிராக புகார் அளித்ததால் தனக்கு தொடர்நது மிரட்டல் வருகிறது. தனது புகைப்படங்களுடன் சமூக வலைதலைங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதன் காரணமாக பள்ளியில் படிக்கும் தனது குழந்தைகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பிரகாசத்திற்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: