×

டிஜிட்டல் கைது மோசடிகள் சந்தேக பரிவர்த்தனைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை: வங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் நீதிமன்றங்களின் பெயரில் நடைபெறும் டிஜிட்டல் அரெஸ்ட் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு அக்டோபர் 27ம் தேதி தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநில யூனியன் பிரதேச அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்திருந்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மல்யா பாக்‌ஷி மற்றும் என்.வி.அஞ்சாரி ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி,” இதுபோன்ற வழக்குகளை கையாள்வதற்காக வங்கிகளுக்கான ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையை (எஸ்.ஓ.பி) இந்திய ரிசர்வ் வங்கி வரைவு செய்துள்ளது. குறிப்பாக சைபர் சார்ந்த மோசடிகளைத் தடுக்க தற்காலிக டெபிட் நிறுத்திவைப்புகளை ஏற்படுத்தக்கூடிய வங்கிகளின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் நாடு முழுவதும் அதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை வெளியிடுமாறு உள்துறை அமைச்சகத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டிஜிட்டல் கைதுகள் தொடர்பான அனைத்து அம்சங்களையும் விரிவாக ஆராய உள்துறை அமைச்சகம் ஒரு உயர் மட்ட துறைகளுக்கு இடையேயான குழுவை அமைத்துள்ளது. அது உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் தலைமையில் செயல்படும். மேலும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறை, வெளியுறவு அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை, சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், நுகர்வோர் விவகார அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுப் பிரிவு, தேசிய புலனாய்வு நிறுவனம், டெல்லி காவல்துறை மற்றும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4சி) ஆகியவற்றின் இணைச் செயலாளர் மட்டத்தின் உறுப்பினர்களைக் இந்த குழு கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

மூத்த வழக்கறிஞர் என்.எஸ்.நப்பினை, ”சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கைகளை வழங்க வங்கிகளைக் கேட்க வேண்டும். இதற்காக ஏ.ஐ.தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் வெறும் சுற்றறிக்கை உதவாது.அலட்சியமாக இருக்கும் வங்கிகள் மீது பொறுப்பு சுமத்தப்பட வேண்டும் என்று நப்பினை கூறினார். மோசடியால் பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க ரிசர்வ் வங்கி குறைதீர்ப்பாளருக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவித்தார்.

வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,”டிஜிட்டல் கைது மோசடி விவகாரத்தில் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பெரிய அளவிலான பரிவர்த்தனைகளை நிறுத்துமாறு எச்சரிக்கும் வழிமுறைகளை வங்கிகள் உருவாக்க வேண்டும். குறிப்பாக ரூ10,000 அல்லது ரூ.20,000 வரை மட்டுமே பணத்தை எடுக்கும் ஓய்வு பெற்றவர், திடீரென ரூ.25 லட்சம் அல்லது ரூ.50 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, வங்கிகள் எச்சரிக்கை விடுக்க வேண்டும். வங்கிகள் பொதுப் பணத்தை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags : Supreme Court ,New Delhi ,Suryakanth ,Union government ,
× RELATED ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை...