இது தென்காசி கலாட்டா அஞ்சும் எங்களுக்குதான் மா.செ.க்கள் அட்ராசிட்டி

 

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய இரண்டும் தனி தொகுதிகள். அதிமுகவை பொறுத்தவரை வடக்கு, தெற்கு ஆகிய இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு இரண்டு மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி ஏற்கனவே கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருக்கிறார்‌.

இந்த முறையும் அவர் கடையநல்லூரில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளரான செல்வமோகன் தாஸ் பாண்டியன் ஏற்கனவே 2 முறை தென்காசி தொகுதியில் போட்டியிட்டவர்.‌ ஒருமுறை வெற்றியும் பெற்றுள்ளார். எனவே, 3வது முறையாக தற்போது அவர் தென்காசி தொகுதியில் போட்டியிடும் வகையில் அனைத்து விதமான செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியே 5 தொகுதிகளிலும் நேரடியாக போட்டியிட்டது. இதில் கடையநல்லூர், ஆலங்குளத்தை தவிர மற்ற 3 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இதில் தென்காசியில் செல்வமோகன் தாஸ் பாண்டியன், சங்கரன்கோவிலில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி மீண்டும் சீட் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். வாசுதேவநல்லூர் தொகுதியையும் கூட்டணிக்கு தரக்கூடாது என்று மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி தலைமையிடம் கூறி வருகிறார். அதே நேரத்தில் கூட்டணி கட்சியான பாஜவும் தென்காசி மாவட்டத்தில் 2 தொகுதிகளை கேட்டு வருகிறது.

பாஜ மாவட்ட தலைவரான ஆனந்தன் அய்யாச்சாமி வாசுதேவநல்லூர் தொகுதியை குறிவைத்து கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். எனவே அந்த தொகுதியை ஒதுக்க பாஜ நெருக்கடி கொடுத்துள்ளது. இரண்டு பக்கமும் நெருக்கடி கொடுப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் கட்சி தலைமை தவித்து வருகிறது.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசை பொருத்தவரை முன்னாள் மாவட்ட தலைவரான பழனி நாடார் ஏற்கனவே தென்காசி தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு ஒரு முறை வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக தற்போது போட்டியிட வாய்ப்பு கேட்கிறார். புதிய மாவட்ட செயலாளரான ஆலங்குளம் செல்வராஜ் கடையநல்லூர் தொகுதியில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.

மதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் தற்போதைய மாநில துணை பொதுச் செயலாளருமான தி.மு. ராஜேந்திரன் கடையநல்லூர் தொகுதியை குறி வைத்துள்ளார். தவெக தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் ராஜ் பிரகாஷ் தென்காசி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். மேலும் தவெகவின் 3 மாவட்டச் செயலாளர்களும் அந்தந்த தொகுதியில் விருப்பமனு கொடுத்துள்ளனர். தமுமுக மாவட்ட தலைவரும் கடையநல்லூர் தொகுதியை குறி வைத்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது பட்டானியும் கடையநல்லூர் தொகுதியை கேட்டு வருகிறார். தென்காசி மாவட்டத்தில் இப்படி ஒவ்வொரு கட்சியிலும் இம்முறை அதிக அளவில் மாவட்ட செயலாளர்களே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டும் சூழல் உள்ளது.

Related Stories: