கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் தொழிலதிபர் மகன் ஓட்டி வந்த விலையுயர்ந்த கார் மோதி ஆறு பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள விஐபி சாலையில் பிரபல புகையிலை தயாரிப்பு நிறுவன அதிபர் கே.கே.மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ரா என்பவர் இன்று காலை ஓட்டி சென்ற 10 கோடி ரூபாய் மதிப்பிலான லம்போகினி சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டி வந்த சிவம் மிஸ்ரா, முதலில் ஒரு ஆட்டோ மீது மோதியதோடு, பின்னர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைக் மீது பயங்கரமாக மோதினார்.
இந்த மோதலில் பைக்கில் இருந்த நபர் சுமார் 10 அடி தூரத்திற்கு அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த கார் அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் காலில் பலத்த காயமடைந்த தவுபிக் அகமது என்பவர் கூறுகையில், ‘நான் சாலையோரமாக, எனது பைக்கிற்கு அருகில் நின்றிருந்த போது, இந்த சொகுசு கார் என் மீது மோதி பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறிந்தது’ என தெரிவித்தார்.
விபத்தை ஏற்படுத்திய சிவம் மிஸ்ரா அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது, அவருக்கு பாதுகாப்பாக மற்றொரு காரில் வந்த அடியாட்கள் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சிவம் மிஸ்ராவை வெளியே இழுத்து தர்ம அடி கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிவம் மிஸ்ராவை மீட்டு காயமடைந்த 6 பேருடன் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். டெல்லி ரோகிணி பகுதியில் பதிவு செய்யப்பட்ட அந்த காரை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
