×

மத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்த சம்பவங்கள்; பெண்ணை கொடூரமாக தாக்கிய பாஜக நிர்வாகி: பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் கேள்வி

சிதி: பாஜக நிர்வாகி ஒருவர் பெண்ணை தடியால் கொடூரமாகத் தாக்கிய காட்சிகள் வெளியானதால் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இளைஞர்களை தாக்கும் மற்றொரு சம்பவமும் நடந்தது. மத்தியப் பிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தின் சிஹாவால் தொகுதி பாஜக நிர்வாகியான சந்தோஷ் பதக் என்பவர், ஒரு பெண்ணைத் தடியால் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பிரச்னையை கிளப்பியுள்ளது. அந்தப் பெண் நிலைதடுமாறி கீழே விழுந்த பின்னரும் சந்தோஷ் பதக் அவரைத் தடியால் தொடர்ந்து தாக்கும் கொடூரம் அரங்கேறியுள்ளது.

அந்தப் பெண் நடத்தி வந்த ஒரு சிறிய கடையை அகற்றியது தொடர்பான முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்துக் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜிது பட்வாரி கூறுகையில், ‘பெண்களைக் காப்போம் எனக் கூறும் பாஜக அரசின் ஆட்சியில் அதிகார போதையில் இருப்பவர்கள் பெண்களைத் தாக்குவது வேதனையளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்தூர் நகரின் ராவ் பகுதியில் நேற்று பாஜக இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் நிர்வாகியான வேதாந்த் திவாரி மற்றும் அவரது ஆதரவாளர்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மோதலின் போது வேதாந்த் திவாரி மற்றும் அவரது கூட்டாளிகள், தங்களது கையில் வைத்திருந்த கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள் மற்றும் மரக்கட்டைகளால் அந்த வாலிபர்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இரண்டு வாலிபர்களும் உடனடியாக மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்துப் புகார் பெற்ற ராவ் போலீசார், வேதாந்த் திவாரி மற்றும் அவரது நண்பர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர், அவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

Tags : Madhya Pradesh ,BJP ,Congress ,Siti ,Sihawal ,Siti district ,Madhya Pradesh… ,
× RELATED துபாயில் சிறைவைக்கப்பட்ட சகோதரனை...