அதிமுகவிடம் இருந்து சிதம்பரத்தை அடித்து பிடுங்கும் பாஜக: அப்செட்டில் சிட்டிங் எம்எல்ஏ

கடலூர் மாவட்டத்தின் ஆன்மிக தலமான சிதம்பரம் சட்டமன்ற தொகுதியை, பாஜக தங்களுக்கு வேண்டுமென கூட்டணி தலைமைக்கு நெருக்கடி தருவதால் அதிமுகவினர் கடுப்பில் உள்ளனர். இதனால் கடந்த 2 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து இருமுறை எம்எல்ஏவாக இருந்த கேஏ பாண்டியன், தற்பொழுது சீட்டு கிடைக்குமா, கிடைக்காதா..? என்ற கலக்கத்தில் உள்ளனர். சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் மிக சொற்ப வாக்குகள் (1,506) வித்தியாசத்தில் வென்ற அதிமுக பாண்டியன், 2021ல் தன்னை எதிர்த்து களமிறங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரை வீழ்த்தினார்.

கோயில் நகரமான சிதம்பரத்திற்கு இதுவரை நலத்திட்டங்களை முழுமை செய்யாத சிட்டிங் எம்எல்ஏ பாண்டியன், மீண்டும் சீட்டு கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்தாலும், ஆனால் இதற்கு பாஜக தடை போடும் என்று உறுதியாக கூறப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளதோ, அந்த தொகுதிகளை எல்லாம் பாஜக குறிவைத்து காய்நகர்த்தி வருகிறதாம். அந்த வகையில் இந்த முறை கண்டிப்பாக சிதம்பரமும் தங்களுக்கே என பாஜகவினர் மார்தட்டி வருகிறார்களாம். இதுதொடர்பாக டெல்லி பவர்புல் தலைமை மூலமாக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் இலைக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பாஜ களமிறங்கிய நிலையில், அதையே சாக்காக வைத்து கறார் காட்டுகிறதாம். சிதம்பரத்தில் மலரத் துடிக்கும் தாமரையால் அதிமுக சிட்டிங் பிரதிநிதி கவலையில் உள்ளதோடு, அங்குள்ள இலை கோஷ்டியே ஏன்டா கூட்டணி வைச்சோம் என கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம். அதேவேளையில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாவும் தன்பங்குக்கு சிதம்பரத்தை கேட்டு சிக்கலை அதிகப்படுத்தி வருகிறதாம்.

Related Stories: