கர்நாடகத்தில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் படுகாயம்

பாகல்கோட்: கர்நாடக மாநிலம் பாகல்கோட் அருகே இன்று மதியம் ஒரு பயிற்சி விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விவசாய நிலத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. ‘ரெட்பேர்டு பிளையிங் டிரெய்னிங் அகாடமி’க்குச் சொந்தமான செஸ்னா 172 (VT-EUC) ரக விமானம், கலபுர்கியிலிருந்து பெலகாவி நோக்கிப் பறந்து கொண்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

பெலகாவி விமான நிலையத்திலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் வானில் பறந்தபோது, விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். நிலமையை உணர்ந்த அவர், மக்கள் நடமாட்டம் இல்லாத பாகல்கோட் அருகிலுள்ள ஒரு வயல்வெளியில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்க முடிவு செய்தார்.

விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளாவதற்கு முன்பே, அதிலிருந்த பயிற்சியாளர் கேப்டன் மற்றும் பயிற்சி மாணவர் ஆகிய இருவரும் சாமர்த்தியமாக விமானத்திலிருந்து வெளியேறினர். இந்தச் சம்பவத்தில் இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் உடனடியாக பெலகாவியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது அவர்கள் இருவரும் அபாய கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து விஜயபுரா மாவட்டம் பாபலேஷ்வர் தாலுகாவிற்கு உட்பட்ட மங்களூரு கிராமத்தில் நிகழ்ந்துள்ளதாக பெலகாவி காவல்துறை உறுதி செய்துள்ளது.

Related Stories: