பணம் வாங்கிக்கொண்டு புதிய நிர்வாகிகள் நியமனம் பாஜ மாநில அமைப்பாளர் சஸ்பெண்ட்: நயினார் நாகேந்திரன் அதிரடி நடவடிக்கை

சென்னை: தலைமை அனுமதி இல்லாமல் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்தது தொடர்பாக பாஜ மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில அமைப்பாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க பாஜ மேலிடம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என ஒருபுறம் நடந்து வந்தாலும் உட்கட்சி பிரச்னை என்பது பாஜ தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.

நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ள பனிப் போர் தேர்தல் நெருங்கும் நிலையில் அப்பட்டமாக வெடித்து வருவது தமிழக பாஜவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், மாநில துணை தலைவராக செயல்பட்டு வரும் கரு.நாகராஜனின் வலது கரமாக செயல்பட்டு வருபவர் பாஜ மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில அமைப்பாளர் சென்னை சி.ராஜா. வட்டி தொழில் செய்து வரும் இவர் பாஜவில் மாவட்ட, மாநில அளவிலான நிர்வாகிகள் நியமனத்தில் தலையிடுவதாக ஏற்கனவே புகார் எழுந்தது.

குறிப்பிட்ட தொகை வாங்கிக் கொண்டு நிர்வாகிகள் நியமனத்தில் பஞ்சாயத்து செய்து வருவதாக எழுந்த புகார் மேலிட நிர்வாகிகள் கவனத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. பணம் வாங்கிக் கொண்டு நிர்வாகிகள் நியமனத்தில் தலையிடுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, குறிப்பிட்ட பதவிகளுக்கு காய் நகர்த்தி வந்தவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் மீது கட்சி தலைமை விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை சி.ராஜாவை பாஜவில் இருந்து நீக்கி தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக பாஜவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜவில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில அமைப்பாளர் சென்னை சி.ராஜா, கடந்த 25ம் தேதி அன்று மாநிலத் தலைமையின் அனுமதியும் ஒப்புதலும் இல்லாமல், கட்சியின் விதிமுறைகளுக்கு மாறாக, மத்திய அரசின் நலத்திட்ட பிரிவுகளுக்கு மாநில செயலாளர்களை நியமனம் செய்துள்ளார்.

இந்த அறிவிக்கையானது உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நியமனங்கள் கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி, கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக இருக்கிறது. இதனால் மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில அமைப்பாளர் சென்னை சி.ராஜா, கட்சியின் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: