கர்ப்பிணிப் பெண்கள் சுகபிரசவம் காண வணங்க வேண்டிய தெய்வம் எது?

?காத்து கருப்பு அடிச்சிடும் என்கிறார்களே, அது துஷ்ட தெய்வமா? தீய சக்தியா?
– சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

தெய்வத்தில் ஏது துஷ்ட தெய்வம்? எல்லா தெய்வமும் நல்ல தெய்வம்தான். அந்த காலத்தில் இரவில் பயணம் செய்ய வேண்டாம் என்று சொல்வார்கள். இரவு நேரத்தில் காணப்படும் இருட்டும் சுழன்றடிக்கின்ற காற்றும் ஒருவிதமான பயத்தினை மனிதர்களின் மனதில் தோற்றுவித்து, அதனால் புத்தி பேதலிக்கப்படுவதால் இவ்வாறு காத்து கருப்பு அடிச்சிடுச்சு என்ற சொற்றொடர் தோன்றியிருக்கிறது. இதனை இறந்துபோன மனிதர்களின் ஆவியோடு தொடர்புபடுத்திச் சொல்வோரும் உண்டு. இறந்தவர்களின் ஆன்மா ஆவியாக அதாவது காற்றாக உலாவந்து மனிதர்களின் உடலில் புகும்போது, கண்களுக்கு அது கருப்பு வடிவில் ஒரு புகையாக தெரிவது போன்ற ஒரு கற்பனையில் இவ்வாறு காற்று கருப்பு என்ற சொல்வழக்கு தோன்றியிருக்கிறது. கருப்பு என்று பக்தியோடு அழைக்கப்படும் கருப்பண்ண ஸ்வாமி நம்மைக் காக்கும் காவல் தெய்வம். காவல் தெய்வம் ஆகிய கருப்பண்ண ஸ்வாமியை கருப்பு என்ற பெயரில் அழைப்பதற்கும், இந்த காத்துகருப்பு என்ற வார்த்தைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

?ஏழரை நடக்கும் காலத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும்?
– த.நேரு, வெண்கரும்பூர்.

எப்பொழுதும் போல் கடமையைச் சரிவர செய்து கொண்டிருக்க வேண்டும். கடமையைச் சரிவர செய்பவர்கள் மீது சனியினால் நன்மைதான் உண்டாகும். இன்னும் சொல்லப் போனால், எந்த சோதனை வந்தாலும் கடமையைச் சரிவர செய்கிறோமா என்று பரிசோதனை செய்வதே சனியின் வேலை. அந்தச் சோதனையில் வெல்பவர்களே வெற்றி காண்கிறார்கள். நமக்கான கடமையில் இருந்து ஒருபோதும் விலகக் கூடாது என்ற எண்ணத்துடன் செயல்படுபவர்களுக்கு, ஏழரை காலம் மட்டும் அல்ல, எல்லா காலமுமே நற்பலனையே தரும்.

?பேருந்து, ரயில், விமான விபத்துகளிலும், பொதுக்கூட்டங்களிலும் ஏற்படுகின்ற உயிர் இழப்புகளுக்கு கிரஹங்கள்தான் காரணமா?
– சங்கர நாராயணன், புதுக்கோட்டை.

இகலோக ஜோதிடம் (மண்டேன் அஸ்ட்ராலஜி) என்று ஜோதிடத்தில் ஒரு பிரிவு உண்டு. இதுபோன்ற விபத்துக்கள், நோய்களால் உண்டாகும் உயிரிழப்புகள், புயல், மழை, வறட்சி, பஞ்சம், பூகம்பம் முதலான இயற்கை சீற்றங்களால் உண்டாகும் உயிரிழப்புகள், நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்களால் உண்டாகும் உயிரிழப்புகள் போன்றவை குறித்து இந்த இகலோக ஜோதிடம் பேசுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் பஞ்சாங்கத்தில் புயல் உண்டாகும், பெருத்த மழை பெய்யும் என்றெல்லாம் குறிப்பிட்டிருப்பார்கள். ஆக இந்த பூமியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் கிரஹங்களுக்கும் நிச்சயமாகத் தொடர்பு உண்டு என்பதே உங்கள் கேள்விக்கான நேரடியான பதில்.

?வெளியூர் பயணம் திங்கட்கிழமையில் புறப்பட்டால் வீட்டில் தடங்கல் செய்வது ஏன்?
– அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

இதை நீங்கள் உங்கள் வீட்டில்தான் கேட்க வேண்டும். ஜோதிடவியல் ரீதியாகவோ, சாஸ்த்ர ரீதியாகவோ இதுபோன்ற விதி ஏதும் கிடையாது. சூலம் என்பதை பிரயாணத்திற்கு கணக்கில் கொள்ள வேண்டும். திங்கட்கிழமை கிழக்கே சூலம் என்று பஞ்சாங்கத்தில் கொடுத்திருப்பார்கள். அதுவும், காலையில் சிறிது நேரம் வரை மட்டுமே. அந்த குறிப்பிட்ட நேரம் வரை கிழக்கு திசை நோக்கிய வெளியூர் பிரயாணம் செய்ய வேண்டாம் என்றும், அப்படி அவசியம் பிரயாணம் செய்ய வேண்டும் என்றால், தயிர் அருந்திவிட்டு கிழக்கு திசையை நோக்கி பயணிக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதே போல், தீதுறு நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படும் பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய 12 நட்சத்திரங்கள் வரும் நாட்களில், தீர்த்த யாத்திரை உட்பட தொலைதூர வெளியூர் பிரயாணத்தினை மேற்கொள்ளக் கூடாது என்று விதி உண்டு. மற்றபடி நீங்கள் சொல்வது போல திங்கட்கிழமை நாளில் வெளியூர் பிரயாணம் செய்யக்கூடாது என்ற கூற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை.

?ஆலயங்களில் வழக்கத்தைவிட அதிகமாக கூட்டம் வருகிறதே? என்ன காரணம்?
– ம.தேவகி, கோவை.

ஆன்மிகப் புத்தகங்களின் மூலமாகவும், இணையத்தின் மூலமாகவும் எந்தெந்த ஆலயங்கள் எங்கெங்கு அமையப் பெற்றிருக்கிறது, அந்த ஆலயத்தின் சிறப்பம்சம் என்ன என்பது போன்ற விஷயங்கள் தற்காலத்தில் மக்களை எளிதாகச் சென்றடைந்துவிடுகிறது. பேருந்து மற்றும் போக்குவரத்து வசதிகளும் தற்காலத்தில் எளிதாகிவிட்டபடியால், மக்களால் நினைத்த நேரத்தில் நினைத்த ஆலயத்திற்குச் செல்ல முடிகிறது. குறிப்பாக மீடியாக்கள் மூலமாக ஆன்மிகக் கருத்துக்கள் மக்களின் மனதில் இடம்பிடிப்பதால், ஆலயங்களில் வழக்கத்தைவிட அதிகமாகக் கூட்டம் வருகிறது.

?விரதம் இருப்பவர்கள் பூண்டு மற்றும் வெங்காயத்தை ஏன் சேர்ப்பதில்லை?
– மாயூரம் இளங்கோ.

உணவிற்கும் மனித உணர்விற்கும் நெருங்கிய தொடர்பு என்பது உண்டு. விரதம் இருக்கும் காலத்தில், மனதை அலைபாயவிடாமல் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சாத்வீக குணத்தைத் தரும் சௌமியமான உணவினை மட்டுமே உட்கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவை தாமஸ மற்றும் ராஜஸ குணங்களைத் தரும் என்பதால் அவற்றைத் தவிர்க்கிறார்கள்.

?கர்ப்பிணிப் பெண்கள் சுகபிரசவம் காண வணங்க வேண்டிய தெய்வம் எது?
– பொன்விழி, அன்னூர்.

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ ஸ்வாமி ஆகியோரை வணங்கி பிரார்த்தனை செய்துகொள்வதன் மூலம், சுகபிரசவம் காணலாம் என்பது நம்பிக்கை. இந்த உலகத்திற்கே தாயாக விளங்கும் அன்னை ஆதிபராசக்தியை வீட்டில் இருந்தவாறே வணங்கி வருவதன் மூலம் சுகபிரசவம் உண்டாகும்.

?வீட்டு வாசலுக்கு அருகே கண்ணில் படும்படி கடப்பாறை, மண்வெட்டி ஆகியவை வைக்கக் கூடாது என்கிறார்களே, ஏன்?
– ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.

கடப்பாறை, மண்வெட்டி மாத்திரம் அல்ல, ஊசி, கத்தி, கத்திரிக்கோல், அருவாள், கொடுவாள், ரம்பம் முதலானவையும் வைக்கக் கூடாது. ஸ்குரூ டிரைவர், கட்டிங் பிளேயர் உட்பட இவை அனைத்தும் நமது வீட்டின் உபயோகப் பொருட்களாக இருந்தாலும், ஆயுதங்கள் கணக்கில் வருபவை. இவை அனைத்தும் பின்னால் புழக்கடையிலோ அல்லது ஸ்டோர் ரூம் பகுதியிலோதான் இருக்க வேண்டும். வீட்டு வாயில்படி என்பது லட்சுமி கடாட்சத்துடன் உள்ளே நுழைபவர்களின் கண்களுக்கு மங்களகரமானதாக இருக்க வேண்டும். வீட்டின் உள்ளே நுழையும்போது மனதில் நல்லெண்ணெம் என்பது நிறைந்திருக்க வேண்டும். அதனால்தான் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற விதமாக ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் மலர்களைக் கொண்டு அலங்கரித்து வாயிற்படிக்கு அருகில் வைக்கிறார்கள்.

Related Stories: