- பிரதமர் மோடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- ப. கே.
- சேகரப்பு
- பெரம்பூர்
- வி.
- பி. கே. சேகரப்பு
- Oteri
- ஜமாலியா
- புலியந்தோப்பு
- பட்டாளம்
பெரம்பூர்: திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதியில் கட்டப்பட்டு வரும் முதல்வர் படைப்பகங்களின் முன்னேற்ற பணிகள் குறித்து இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அந்த வகையில் ஓட்டேரி, ஜமாலியா, புளியந்தோப்பு, பட்டாளம் ஆகிய நான்கு இடங்களில் கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து விரைவாக பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது, மேயர் பிரியா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: சென்னையில் 38 முதல்வர் படைப்பகம் உருவாகி கொண்டிருக்கிறது. இன்று ஓட்டேரி, ஜமாலியா புளியந்தோப்பு, பட்டாளம் உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்டு வரும் 4 படைப்பகங்களையும் ஆய்வு செய்துள்ளோம்.
இந்த பணிகள் நிறைவடைந்து வரும் 20ம் தேதிக்குள் தொடங்க உள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கப்பட்ட அன்னம் தரும் அமுத கரங்கள் நிகழ்ச்சி, 350 நாட்களை கடந்துள்ளது. காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வந்து 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள். 125 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அரசு சீர்குலைக்க திட்டமிடுவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு, நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. எடப்பாடிக்கு. சட்டமன்றத்தில் இருக்கும்போது ஒரு நிலைபாடு, சட்டமன்றத்திற்கு வெளியே ஒரு நிலைபாடு.
பாஜவுடன் கூட்டணி என உறுதி செய்யப்பட்ட பிறகு ஒரு நிலைபாடு. அரைகுறையாக இழுத்து கொண்டிருக்கும் போது ஒரு நிலைப்பாடு. சந்திக்க செல்லும்போது ஒரு முறை முகமூடி… மற்றொரு முறை முகமூடி இல்லாமல்… 125 நாள் வேலைவாய்ப்பு என்பது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய முதுகெலும்பாக இருக்கும் திட்டம். அதை சீர்குலைத்து, பல்வேறு சரத்துகளை அந்த திட்டத்தில் கொண்டு வந்து சேர்த்து மக்களை ஏமாற்றுவதற்காக 100 என்பதை 125 என்று மாற்றி இருக்கிறார். உண்மையிலே ஏற்கனவே இருக்கக்கூடிய திட்டத்தை சீர்குலைத்த ஒன்றிய அரசை கண்டித்துதான் எடப்பாடி போராட்டத்தை நடத்த வேண்டும்.
அந்த திட்டத்தை வலுப்படுத்த, செம்மைப்படுத்த வேண்டும் என போராடி கொண்டிருக்க கூடிய எங்கள் முதல்வரின் பின்னால் எடப்பாடி நிற்க வேண்டும். இந்த மாதம் இறுதியில் வரக்கூடிய பிரதமர், திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்ல இருப்பது மகிழ்ச்சி. தேர்தலில் வேல் எடுத்து பார்த்தார்கள். திருப்பரங்குன்றத்தை கையில் எடுத்தார். முருகன் பக்தி மாநாடு நடத்தி பார்த்தார்கள். ஆனால் என்னப்பன் தமிழ் கடவுள் முருகன், எங்கள் முதல்வரோடுதான் கைகோர்த்து நின்றுள்ளார். எனவே பிரதமருக்கு வைக்கின்ற ஒரு வேண்டுகோள்..
அறுபடை வீடுகளையும் சுற்றி பார்த்து அதிலும் குறிப்பாக பழனிக்கு சென்று நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சமீபத்தில் குடமுழுக்கு முடிந்த திருச்செந்தூர் முருகர் கோயிலுக்கும் சென்று சுற்றி பார்க்க வேண்டும். அறுபடை வீடுகளுக்கும் சென்று வர பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறேன். திருச்செந்தூர் கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. திருச்செந்தூர் வருபவர்களுக்கு அறுபடை வீடுகளையும் ஒரே நேரத்தில் தரிசிப்பதற்கு ஏதுவாக அறுபடை முருகனையும் உருவாக்கி கொண்டிருக்கிறோம்.
இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த பணிகள் மட்டும்தான் ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும். மற்ற பணிகள் அனைத்தும் இந்த மாதத்தில் நிறைவடைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
