×

மக்கள் நிராகரித்த பிறகு, நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற விரும்புகிறீர்கள் : பிரசாந்த் கிஷோரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

புதுடெல்லி: மக்கள் நிராகரித்த பிறகு, நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற விரும்புகிறீர்கள் எனக் கூறி, பீகார் தேர்தலை ரத்து செய்யக் கோரிய பிரசாந்த் கிஷோரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த ஆண்டு நவம்பா் மாதம் பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் பொறுப்பேற்றாா்.இந்த தோ்தலில் புதிதாகக் களமிறங்கிய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.

இதனிடையே பீகாா் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக அந்த மாநிலத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மகளிருக்கும் தலா ரூ.10,000 வழங்கப்பட்டது. இது தோ்தல் நடத்தை விதிமீறல் எனக் கூறி, பீகாா் பேரவைத் தோ்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் தோ்தல் நடத்த வேண்டுமென ஜன் சுராஜ் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “உங்களின் அரசியல் கட்சி எத்தனை ஓட்டுகள் வாங்கியது? தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் உடனடியாக நீதிமன்றங்களுக்கு வரக்கூடாது. வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், மீண்டும் விளம்பரம் தேடுவதற்காக நீதித்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது. தேர்தலுக்காக இலவசப் பொருட்கள் வழங்குவதை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். நேர்தலில் எல்லாவற்றையும் இழந்த கட்சி சார்பிலான இந்த வழக்கை விசாரிக்க நாங்கள் விரும்பவில்லை. இன்று வழக்கு போடும் இந்த அரசியல் கட்சி நாளை ஆட்சிக்கு வந்தால், அதுவும் இதே காரியத்தைச் செய்யும்,” இவ்வாறு தெரிவித்தனர். மேலும் பிரசாந்த் கிஷோரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Tags : SUPREME COURT ,PRASANT KISHOR ,New Delhi ,Prashant Kishore ,Bihar elections ,Bihar ,
× RELATED விருதுநகரில் நாளை நடைபெறும் இளைஞரணி...