சென்னை : குடிநீர் பாட்டிலில் மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளது குறித்த எச்சரிக்கை வாசகம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தையின் நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் எனும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய உணவு பாதுகாப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையில், “பிளாஸ்டிக் நுண்துகள்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லக்னோ, கொச்சி உள்ளிட்ட 3 இடங்களில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் குடிநீர் பாட்டில்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்த போது, அவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதே போல பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்திருக்கக்கூடிய உப்பு, சக்கரையிலும் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதும் தெரியவந்துள்ளது.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரிசீலித்த உயர்நீதிமன்றம், “மைக்ரோ பிளாஸ்டிக் மனிதர்களுக்கு மட்டுமில்லாமல், விலங்குகளுக்கும் தீங்கு ஏற்படுத்தக்கூடியது. கண்களுக்குப் புலப்படாத மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இடம்பெற்றுள்ளது குறித்த எச்சரிக்கை வாசகங்களை, குடிநீர் பாட்டில்களில் இடம்பெறச் செய்ய வேண்டும்,” என குடிநீர் பாட்டில் உற்பத்தி நிலையங்களுக்கு அறிவுறுத்தி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆய்வுகள் ஆரம்ப நிலையிலேயே இருப்பதனால், எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற செய்தால் மக்களிடையே குழப்பம் ஏற்படும் என இந்திய உணவு பாதுகாப்புத் துறை ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து ஆய்வுகளை விரைந்து முடிக்க அறிவுறுத்திய நீதிபதிகள், அதுவரை எச்சரிக்கை வாசகங்களை ஒட்ட வேண்டாம் என உத்தரவிட்டனர்.
