×

வேலூர் விஐடியில் 8ம் ஆண்டு உழவர் சங்கமம் 2 நாள் கண்காட்சி உலகளவில் வாழைப்பழம் உற்பத்தியில் இந்தியா முதலிடம்

*தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் பேச்சு

சென்னை : இந்தியா உலகளவில் வாழைப்பழம் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது, இதன்மூலம் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது என்று திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ரா.செல்வராஜன் பேசினார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரி சார்பில் 8-ம் ஆண்டு உழவர் சங்கமம் -2026 2 நாள் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். விஐடி செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், வேளாண் கல்லூரி டீன் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவுரவ விருந்தினர்களாக கொரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் துணைத் தலைவர் சீனிவாசன், இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம், தமிழ்நாடு மாநில விற்பனை மேலாளர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக திருச்சியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ரா.செல்வராஜன் பேசியதாவது:

இந்தியாவில் 1943ல் மேற்கு வங்கத்தில் பசி, பட்டினியால் கோடிக்கணக்கான மக்கள் இறந்தனர். அதன் பின்னர் 1965-ல் பசுமைப் புரட்சி வந்தது. விவசாயத்தில் முன்பை விட இப்போது 6.6 சதவீதம் அதிகமான உணவு உற்பத்தியை செய்கிறோம்.

சுமார் 353 மில்லியன் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்கிறோம். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சிறுதானிய உற்பத்தி அதிகமாக உள்ளது.

இந்தியா உலகளவில் வாழைப்பழம் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. இப்போது 8 லட்சம் டன் ஏற்றுமதி செய்கிறோம். ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. நாம் மண் வளத்தை மேம்படுத்த வேண்டும். மேலும் 9 புதிய வாழை ரகங்களை கண்டுபிடித்துள்ளோம்.

திருப்பத்தூரில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதர மாவட்டங்களில் பயிற்சி தர தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், முன்னதாக விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது: இந்தியா ஒரு விவசாய நாடு. விளைநிலம் அதிகமாக உள்ள நாடு. விளை நிலத்தில் இந்தியா முதல் இடத்திலும், அமெரிக்கா, சீனா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்தியாவில் 50 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறை பங்களிப்பு 16 சதவீதம் மட்டுமே உள்ளது. உலகிலேயே அதிகமான பழங்கள், காய்கறிகள் இந்தியாவில் அதிகமாக விளைகிறது.

அரிசி, கோதுமை விளைவிப்பதில் 2-வது இடத்தில் உள்ளோம். வேளாண் பரப்பளவில் குறைந்த அளவிலும் இருந்தாலும் சீனா முதலிடத்தில் உள்ளது. விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்.

கோதாவரி- காவிரி நதிகளை இணைத்தால் தென்னிந்தியாவின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். இத்திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்வில் பேராசிரியர்கள் பால்மன்சிங் மற்றும் குன்ஜி பாலமுரளி மேற்பார்வையில் வடிவமைக்கப்பட்ட பழங்களுக்கான உறையிடும் கருவி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து வேளாண் கண்காட்சியை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் 145 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண் கண்காட்சியில் காய்கறிகளில் மயில், வாத்து, கொக்கு போன்ற பறவைகள் செய்து வைக்கப்பட்டிருந்தன. உழவர் சங்கமம் கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது.

Tags : 8th Annual Farmers' Association 2 Day Exhibition ,Vellore VID ,India ,National Banana Research Centre ,Chennai ,Ra. Selvarajan ,
× RELATED திண்டுக்கல் அருகே கொசவப்பட்டியில்...