திருப்பரங்குன்றம் : மதுரை அருகே திடீரென வானில் பறந்த ராட்சத பலூனால், பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.மதுரையில் கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் மூலம் வான் சுற்றுலாவிற்கு தனியார் நிறுவனம் ரூ.6 ஆயிரம் கட்டணத்தில் ஏற்பாடு செய்தது.
போதிய வரவேற்பின்றி இத்திட்டம் தொடராமல் போனது. இந்நிலையில் மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் ரூ.15 ஆயிரம் கட்டணத்தில் மதுரை பகுதியை 10 கிமீ சுற்றளவில் வானில் ராட்சத பலூனில் பறந்து ரசிக்கலாம் என அறிவித்திருந்தது.
இதற்கிடையே அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஏழு பேர் கொண்ட குழுவினர், நேற்று அழகர்கோவில் பகுதியில் இருந்து ராட்சத பலூன் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பலூன் மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வானில் திடீரென வட்டமிட்டது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், இதுகுறித்த விபரம் தெரியாமல் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் பரபரப்பு நிலவியது. பின்னர் அந்த பலூன் அருகில் உள்ள வடபழஞ்சி பகுதியில் உள்ள வயலில் தரை இறங்கியது. உடனடியாக அப்பகுதி மக்கள் அங்கு கூடினர்.
அப்போது தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வான்வழி சுற்றுலாவிற்கான சோதனை ஓட்டம் என்பது தெரியவந்தது. பின்னர் ஊழியர்கள் பலூனை சரி செய்து மீண்டும் பறக்கவிட்டு அதில் புறப்பட்டு சென்றனர்.
