சென்னை: மூத்த கல்வியாளர் ச.சீ.ராசகோபாலன் மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: மூத்த கல்வியாளர் ச.சீ.ராசகோபாலன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆசிரியராக தமது கல்விப் பணியை தொடங்கிய முனைவர் ச.சீ.ராசகோபாலன் தமிழ்நாடு அரசு முன்னெடுத்த சமச்சீர் கல்வி குழுவின் உறுப்பினராக இருந்து தமிழ்நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர். அன்னாரது மறைவு கல்வித்துறைக்கு பேரிழப்பாகும். அவருக்கு என் அஞ்சலியை செலுத்துவதுடன், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி: மூத்த கல்வியாளர் ராசகோபாலன் மறைவு கல்வித்துறைக்கு ஒரு பேரிழப்பு. கலைஞரின் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சமச்சீர்க் கல்விக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தவர். தேர்வு என்பது கற்றலை மட்டுமே மதிப்பிடுவது இல்லை; கற்பித்தலையும் மதிப்பிடுவது என்பதை வலியுறுத்தியவர். முன்னோடி திட்டங்களுக்கு வழிகாட்டும் அதேவேளையில் விமர்சிக்கவும் தயங்காதவர், மாணவர்களின் நலன் விரும்பி. அய்யாவுக்கு புகழஞ்சலி செலுத்துகிறோம் என கூறியுள்ளார்.
