- என் கனவு
- திண்டிவனத்தில்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- விழுப்புரம்
- கனவு
- எதிர்காலம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
விழுப்புரம்: திண்டிவனத்தில் இன்று நடந்த அரசு விழாவில் 1.80 லட்சம் பேருக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். என் கனவு, என் எதிர்காலம் திட்டத்தின் இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் அந்த முகாம்களின் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் 1.80 லட்சம் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் ஒரே நேரத்தில் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் மாநில அளவிலான திட்டத்தின் தொடக்க விழா விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-செஞ்சி சாலையில் கொள்ளார் கிராமத்திலுள்ள சிப்காட் வளாகத்தில் இன்று நடந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்களை வழங்கினார். விழாவில் இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும் வகையில் ‘‘என் கனவு, என் எதிர்காலம்” என்ற புதிய திட்டத்தின் இணைய தளத்தையும் தொடங்கி வைத்த முதல்வர், விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேளாண்மை துறை சார்பில் மினி டிராக்டர் உள்ளிட்ட விவசாய பொருட்கள், மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் 100க்கும் மேற்பட்ட 3 சக்கர வாகனங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ.60 கோடியில் கட்டப்பட்ட அரசு தலைமை மருத்துவமனையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து ஒரு மாவட்ட ஆட்சியர் மற்றும் 2 பயனாளிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடினார்.
விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை 8 மணிக்கு சென்னையிலிருந்து காரில் புறப்பட்ட முதல்வருக்கு திண்டிவனம் நகர எல்லையில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி, பொறுப்பு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட செயலாளர் பொன்.கவுதமசிகாமணி எம்எல்ஏக்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா எம்எல்ஏ உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து திண்டிவனம் அங்காள அம்மன் கோயில் பகுதியில் இருந்து அரசு விழா மேடை வரை ரோடுஷோவாக சென்ற முதல்வர், மக்களை சந்தித்து கலந்துரையாடினார். முதல்வர் வருகையையொட்டி விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு மேற்பார்வையில் எஸ்பி சாய்பிரணீத் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திண்டிவனம் மக்களின் 40 ஆண்டு கனவை நிறைவேற்றிய முதல்வர்
வட தமிழகத்தையும், தென் தமிழகத்தையும் இணைக்கும் முக்கிய மைய புள்ளியான திண்டிவனத்தில் பயன்பாட்டில் இருந்து வந்த இந்திரா காந்தி பேருந்து நிலையம் இடப்பற்றாக்குறையால் வேறு இடத்துக்கு மாற்றும் நிலை ஏற்பட்டது. புதிய பஸ் நிலையம் அமைக்க ேவண்டும் என பயணிகள் மற்றும் திண்டிவனம் நகர வியாபாரிகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக விடுத்த தொடர் கோரிக்கையின் அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கியது.
ரூ.26 கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கர் பரப்பளவில் 50 பேருந்து நிறுத்துவதற்கான நடைமேடைகள், 61 கடைகள், ஒரு சைவ, அசைவ உணவகம், பொருள்கள் வைப்பறை, 10 காத்திருப்பு கூடம், 6 நேர காப்பகம், காவல் துறை கட்டுப்பாட்டு அறை, நான் உங்களுக்கு உதவலாமா அறை, பேருந்து முன்பதிவு அறை, ரயில் முன்பதிவு அறை, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஓய்வறை, 2 மாற்றுத்திறனாளிகள் ஓய்வறை, 3 பெண்கள் மற்றும் ஆண்கள் கழிவறை, சுகாதார பிரிவு அலுவலகம் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. திண்டிவனம் மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையான இந்த புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடையிலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
முதல்வர் ரோடு ேஷா… மக்கள் ஆரவாரம்
திண்டிவனம் அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து வேனில் வந்தார். அப்போது செஞ்சி பேருந்து நிறுத்தத்தில் சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்கள் கைகளை உயர்த்தி முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். உடனே முதல்வர் வேனில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். சிலர் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பொதுமக்களின் வரவேற்பை பெற்ற முதல்வர், சுமார் ஒரு கி.மீ தூரம் நடந்தே சென்று விழா மேடையை அடைந்தார்.
