×

கிராம ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

 

சென்னை: கிராம ஊராட்சி தூய்மைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைக் காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் மாத ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த விரிவான அரசாணையை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,கிராம ஊராட்சிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் தூய்மைக் காவலர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் ரூ.5,000-லிருந்து ரூ.6,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.476.136 கோடி நிதி மாநில நிதி ஆணைய மானியத்திலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்விற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் வழங்கல் மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, இந்த நிதியானது கிராம ஊராட்சிகள் (55%), பஞ்சாயத்து ஒன்றியங்கள் (39%) மற்றும் மாவட்ட ஊராட்சிகள் (6%) என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படும்.இதன்படி, கிராம ஊராட்சிகளிடமிருந்து ரூ.261.875 கோடியும், பஞ்சாயத்து ஒன்றியங்களிடமிருந்து ரூ.185.693 கோடியும், மாவட்ட ஊராட்சிகளிடமிருந்து ரூ.28.568 கோடியும் நிதியாகப் பெறப்படும்.ஒவ்வொரு மாதமும் ஊதியத்திற்காக ரூ.39.678 கோடி நிதியை விடுவிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. தூய்மைக் காவலர்கள் தொடர்ந்து ஊராட்சி அளவிலான வறுமை ஒழிப்புச் சங்கம் அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலமாகவே ஒப்பந்த அடிப்படையில் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஊராட்சிகளில் பெருகி வரும் வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தற்போதுள்ள தூய்மைக் காவலர்களைத் தேவைக்கேற்ப மறுஒதுக்கீடு செய்ய ஊரக வளர்ச்சி ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புறங்களுக்கு இணையான வளர்ச்சி கிராம ஊராட்சிகளிலும் ஏற்பட்டுள்ளது. 2024-25 வரி மதிப்பீட்டின்படி, சுமார் 1.54 கோடி வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கிராமப்புறங்களில் உள்ளன. வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரித்தல், தரம் பிரித்தல் மற்றும் சுகாதாரத்தைப் பேணுதல் போன்ற தூய்மைக் காவலர்களின் மகத்தான பணியை அங்கீகரிக்கும் விதமாக இந்த ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இந்த ஊதிய உயர்வு 2026 பிப்ரவரி முதல் நடைமுறைக்கு வருவதால், தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தூய்மைக் காவலர்கள் பயனடைவார்கள்.

Tags : Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கார் வாங்க ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ.35...