×

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிந்து பிரதமர் மோடி விவசாயிகளின் ரத்தம், வியர்வையை விற்றுவிட்டார்: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிந்து பிரதமர் மோடி விவசாயிகளின் கடின உழைப்பு, அவர்களின் ரத்தம், வியர்வையை விற்றுவிட்டார். ஒட்டுமொத்த நாட்டையும் அடகு வைத்து விட்டார்’ என ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இந்தியா-அமெரிக்கா இருதரப்பு ஒப்பந்தம் குறித்து, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பேட்டி அளித்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: நான் 3 விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். அவர்கள் நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதிக்கவில்லை. பிரதமர் மோடி கலக்கமடைந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக முடங்கிக் கிடந்த வர்த்தக ஒப்பந்தம், பிரதமர் மோடிக்கும் எனக்கும் தெரிந்த சில காரணங்களுக்காக, நேற்று மாலை இறுதி செய்யப்பட்டது. மோடி கடுமையான அழுத்தத்தில் இருக்கிறார்.

ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொண்டு உயர்த்தப்பட்ட அவரது பிம்ப பலூன் வெடித்துவிடக்கூடும் என்ற பயத்தில் இருக்கிறார். இப்போது பிரச்னை ராணுவ தளபதி நரவனே புத்தகம் அல்ல. அது 2ம்பட்ச விஷயம். முக்கிய விஷயம் என்னவென்றால் நமது பிரதமர் சமரசம் செய்யப்பட்டுள்ளார். அதை யார் செய்தார்கள், எப்படி செய்யப்பட்டது என்பதை இந்திய மக்கள் சிந்திக்க வேண்டும். அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் மூலம் இந்திய விவசாயிகளின் கடின உழைப்பு, அவர்களின் ரத்தம், வியர்வையை ஆகியவற்றை பிரதமர் மோடி விற்று விட்டார்.

விவசாயிகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டையும் அவர் விற்று விட்டார். அதனால்தான் அவர் என்னை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிப்பதில்லை. தொழிலதிபர் அதானிக்கு எதிராக அமெரிக்காவில் இருக்கும் வழக்கு மற்றும் எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தில் பிரதமர் மோடி தற்போது நிறைய அழுத்தத்தை சந்திக்கிறார். அமெரிக்காவில் உள்ள வழக்கு அதானியை இலக்கு வைப்பது அல்ல. அது மோடியின் நிதி கட்டமைப்பை இலக்கு வைப்பதாகும். எப்ஸ்டீன் கோப்புகளில் இன்னும் பல ரகசியங்கள் வெளியே வரப்போகின்றன. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

* தேச நலன்களுக்கு ஆதரவாக உள்ளதா காங்.?
பாஜ எம்பி அனுராக் தாக்கூர் கூறுகையில், ‘‘இந்தியாவுக்கு எதிரான மனப்பான்மை ராகுல் காந்தி, காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களிடம் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், இந்தியா மீது அமெரிக்கா வரி விதித்த போது அவர்கள் கொண்டாடினார்கள். பின்னர் இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்ட போது கேள்விகளை எழுப்பினார்கள் ’’ என்றார்.

* விவசாயிகள் மீது பாஜ மீண்டும் தாக்குகிறது
சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘ விவசாயத்தைச் சார்ந்துள்ள நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தினருக்கு பாஜ அரசு துரோகம் செய்துள்ளது. பாஜ மற்றும் அதன் கூட்டாளிகள் சுதந்திரத்திற்கு முன்பு வெளிநாட்டு நலன்களின் ஏஜென்ட்களாக இருந்தனர். இன்றும் அவ்வாறே தொடர்கின்றனர். இந்த நடவடிக்கைகள் படிப்படியாக விவசாயிகளின் வருமானத்தைக் குறைத்து, அவர்கள் தங்கள் நிலங்களை செல்வந்தர்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் விற்கும்படி கட்டாயப்படுத்தும். பாஜவை அகற்றுவோம், வயல்களையும், விவசாயிகளையும் காப்பாற்றுவோம்’’ என்றார்.

Tags : Modi ,US ,Rahul Gandhi ,New Delhi ,United States ,India ,Parliament ,
× RELATED மட்டை பிடிக்க தெரியாதவர்களுக்கு...