அமெரிக்காவில் வசிக்கும் மதுரை விஞ்ஞானிக்கு ‘கிராபூர்ட்’ பரிசு: ரூ.8.25 கோடி கிடைக்கும்

 

நியூயார்க்: அமெரிக்காவில் தமிழக காலநிலை விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதனுக்கு (82) புவி அறிவியல் ஆய்வுக்காக உயரிய ‘கிராபூர்ட்’ பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசளிக்கும் ஸ்வீடனின் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி இந்த பரிசை அறிவித்து உள்ளது. புவி அறிவியலுக்கான ‘நோபல் பரிசு’ என்று கருதப்படும் கிராபூர்ட் பரிசு, கரியமில வாயுவைவிட பூமியை மிக கடுமையாக வெப்பமயமாக்கும் காரணிகள், வளிமண்டல பழுப்பு நிற மேகங்கள் ஆகியவை குறித்து பல ஆண்டுகளாக ராமநாதன் மேற்கொண்ட ஆராய்ச்சியை அங்கீகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதனுக்கு கிராபூர்ட் பரிசுடன் ரொக்கமாக 8 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனர் (சுமார் ரூ.8.25 கோடி) அளிக்கப்பட
உள்ளது.

கடந்த 1975ம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் ராமநாதன் பணியாற்றினார். அப்போது வளிமண்டலத்தில் கரியமில வாயுவைவிட க்ளோரோஃபுளுரோ கார்பன்கள் (சிஎஃப்சி) 10,000 மடங்கு வீரியமாக வெப்பத்தை தேக்குவதாக கண்டுபிடித்தார். அவரின் ஆராய்ச்சி புவி வெப்பமயமாதல் குறித்த புரிதலை மாற்றியமைத்தது. இதுகுறித்து ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியிடம் அவர் கூறுகையில், ‘1975ம் ஆண்டுவரை, புவி வெப்பமயமாதலுக்கு கரியமில வாயுதான் முக்கிய காரணம் என்று கருதினோம். ஆனால் சிஎஃப்சி குறித்து தெரியவந்த பின்னர், சுற்றுச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் மனிதர்களுக்கும், தொழில்நுட்பத்துக்கும் உள்ள ஆற்றலை அறிந்து அதிா்ச்சி ஏற்பட்டது’ என்றார்.

இந்திய பெருங்கடல் ஆராய்ச்சியில் அவர் ஆற்றிய பணி மூலம், தெற்காசிய வளிமண்டலத்தில் பழுப்பு நிற மேகங்கள் குறித்து தெரியவந்தது. இந்த ஆராய்ச்சி இந்தியாவில் பருவமழை, இமய மலை பனிப்பாறைகள் வேகமாக உருகுதல் ஆகியவற்றுடன் காற்று மாசை தொடர்புபடுத்தியது. வளிமண்டலத்துக்குள் தீங்கு விளைவிக்கும் கோடிக்கணக்கான டன் வாயுக்கள் ஊடுருவுவதை தடுக்கும் மான்ட்ரியால் ப்ரோடோகால் ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அவரின் பணி அடித்தளமாக அமைந்தது.

வீரபத்ரன் ராமநாதன் மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவற்றில் படித்து பட்டம் பெற்ற அவர், தனது தொழில்முறை வாழ்க்கையை தெலங்கானாவின் செகந்திராபாத் நகரில் குளிர்சாதன பெட்டி தொழிற்சாலையில் பொறியியலாளராக தொடங்கினார். அங்குதான் அவர் முதல்முறையாக சிஎஃப்சியை கையாள நேர்ந்தது. பின்னர் அமெரிக்காவின் நாசாவில் பணியாற்றிய அவர் தற்போது, கலிபோர்னியா பல்கலைக்கழகம் – சான் டியாகோவில் கௌரவ பேராசிரியராக உள்ளார்.

Related Stories: