மேற்கு ஆசியா போர் 4வது வாரத்தை எட்டியது ஈரான் அணுசக்தி மையம் மீது மீண்டும் குண்டுவீச்சு: அடுத்த வாரத்தில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் அறிவிப்பு

 

துபாய்: மேற்கு ஆசியாவில் போர் 4வது வாரத்தை எட்டிய நிலையில் ஈரானின் முக்கிய அணுசக்தி மையமான நடான்ஸ் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போர் இறுதிகட்டத்தை எட்டியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய நிலையில், அடுத்த வாரத்தில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேலிய படைகள் நடத்தி வரும் போர் 4வது வாரத்தை எட்டி இருக்கிறது. 22வது நாளான நேற்று ஈரானின் முக்கிய அணுசக்தி மையமான நடான்ஸ் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் டெஹ்ரானில் இருந்து 220 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த அணுசக்தி மையம், ஈரானின் முக்கிய யுரேனியம் செறிவூட்டும் தளமாக இருக்கிறது. போரின் ஆரம்ப கட்டத்திலேயே நடான் அணுசக்திமையம் தாக்குதலுக்கு உண்டானது. மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரின் போதும், நடான்ஸ் அணுசக்தி மையம் தாக்கப்பட்டது. அப்போது அமெரிக்க போர் விமானங்கள் பங்கர் பஸ்டர் எனவும் மலையை குடைந்து தாக்கும் சக்திவாய்ந்த குண்டுகளை வீசின. இந்த தொடர் தாக்குதலால் நடான்ஸ் மைய வளாகத்தில் உள்ள பல்வேறு கட்டமைப்புகள் சேதமடைந்திருப்பது செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டுகின்றன. இந்த தாக்குதலில் கதிரியக்க கசிவுகளும் ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி மைய கண்காணிப்பு அமைப்பிடம் ஈரான் தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாக சர்வதேச மையமும் கூறி உள்ளது.

இந்த தாக்குதலை அமெரிக்க போர் விமானங்கள் நடத்தியதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே, இரவு முழுவதும் காலை வரையிலும் தலைநகர் டெஹ்ரானின் கடுமையான வான்வழி தாக்குதல் நடத்ததாக ஈரான் மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீதும் இஸ்ரேல் மீதும் ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல்களை நடத்தியது. பல டிரோன்களை இடைமறித்து அழித்ததாக வளைகுடா நாடுகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலில் டெல் அவிவ் நகரில் மழலையர் பள்ளி மீது ஈரானின் ஏவுகணை சிதறல்கள் விழுந்ததில் பள்ளி கட்டிடம் சேதமடைந்தது. அந்த சமயத்தில் பள்ளியில் யாரும் இல்லாததால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
மேலும் ஜெருசலேம் நகரில் ஈரான் நடத்தி ஏவுகணை தாக்குதலில் மிகவும் பாரம்பரியமான அல் அக்சா மசூதியில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள வாகன நிறுத்துமிடம் சேதமடைந்தது. ஏற்கனவே ஈத் பண்டிகையை கொண்டாட விடாமல் அல் அக்சா மசூதி இஸ்ரேல் ராணுவத்தால் மூடப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் அதன் வளாகத்திற்கு அருகே குண்டுசத்தம் கேட்டது அப்பகுதி மக்களை பீதி அடைய வைத்தது. இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், ‘‘மத்திய கிழக்கில் நமது மாபெரும் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், நமது நோக்கங்களை அடைவதற்கு நாம் மிகவும் நெருங்கிவிட்டோம். இப்போதே இப்போரை அமெரிக்கா முடித்துக் கொண்டாலும் ஈரான் தனது ராணுவ கட்டமைப்புகளை பழைய நிலைக்கு கொண்டு வர பத்தாண்டுகள் ஆகும்.

அது ஏற்கக் கூடியது அல்ல. நாங்கள் இன்னும் நீண்ட காலம் போரிட்டால், அவர்களால் ஒருபோதும் தங்கள் திறன்களை மீட்க முடியாது’’ என கூறி உள்ளார். அமெரிக்கா 3 கப்பல்களில் கூடுதலாக 2,500 வீரர்களை அனுப்பி வைத்ததாக தகவல் வெளியான நிலையில், டிரம்ப் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். அதே சமயம், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில், ‘‘அடுத்த வாரம் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்-அமெரிக்காவின் தாக்குதலின் தீவிரம் கணிசமாக அதிகரிக்கும்’’ என கூறி உள்ளார். ஈரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து லெபனானிலும் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை இப்போரில் ஈரானில் 1444 பேரும், இஸ்ரேலில் 15 பேரும், மேற்குக் கரையில் 4 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். லெபனானில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது.

 

Related Stories: