4,000 கிமீ தொலைவில் இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்கா, இங்கி. ராணுவ தளம் மீது பாலிஸ்டிக் ஏவுகணை ஏவியது ஈரான்: மேற்கு ஆசியாவை தாண்டி முதல் தாக்குதல் முயற்சி

 

துபாய்: தன் நாட்டின் மீதான தாக்குதலுக்கு காரணமான அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரானில் இருந்து 4,000 கிமீ தொலைவில் இந்திய பெருங்கடலின் மையப்பகுதியில் உள்ள அமெரிக்கா-இங்கிலாந்து ராணுவ தளமான டியாகோ கார்சியா தீவை குறிவைத்து ஈரான் 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை நேற்று ஏவியது. இதில் ஒரு ஏவுகணை தோல்வி அடைந்ததாகவும் மற்றொன்று இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது இங்கிலாந்தை ஆத்திரமூட்டி உள்ளது. ஈரானுக்கு எதிரான போரில் தனது நேச நாடுகள் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்தும் எந்த மேற்கத்திய நாடுகளும் முன்வரவில்லை. இப்படிப்பட்ட சூழலில் இங்கிலாந்தின் ராணுவ தளமான டியாகோ கார்சியா தீவை ஈரான் குறிவைத்ததற்கு இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போரில் இங்கிலாந்து நேரடியாக பங்கேற்கவில்லை. ஆனாலும், இம்மாத தொடக்கத்தில் சைப்ரஸ் தீவில் உள்ள இங்கிலாந்து விமானப்படை தளத்தின் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது.

இதன் பின்னர், அமெரிக்க போர் விமானங்கள் இங்கிலாந்து ராணுவ தளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என நேற்று முன்தினம் அனுமதி தரப்பட்டது. இந்த அனுமதியை தொடர்ந்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் முயற்சியை நடத்தி உள்ளது. ஈரானின் வெற்றியடையாத இந்த தாக்குதல் முயற்சியில், 4,000 கிமீ தொலைவில் உள்ள டியாகோ கார்சியா ராணுவ தளத்திற்கு ஏவுகணைகள் எவ்வளவு அருகில் வந்தன என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்த ராணுவ தளத்தில் தான் அமெரிக்காவின் மலையை குடைந்து தாக்கும் அதிநவீன குண்டுவீச்சு விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள் நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மேற்கு ஆசியாவில் மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த ஈரான் முதல் முறையாக அப்பிராந்தியத்தை தாண்டி இந்திய பெருங்கடல் வரையிலும் குறிவைத்துள்ளது.

 

Related Stories: