ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம்: எரிசக்தித் துறை மீது கை வைத்தால் கடும் சைபர் தாக்குதல்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவிற்கு ஈரான் மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஈரானின் எரிசக்தி மற்றும் எரிபொருள் சார்ந்த கட்டமைப்புகள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் முக்கிய உள்கட்டமைப்புகள் சிதைக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் இந்த பதிலடியானது வெறும் ராணுவ மோதலாக மட்டும் இருக்காது என்றும், நவீன தொழில்நுட்ப ரீதியிலான சைபர் தாக்குதல்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் ஈரான் ராணுவத் தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

ஈரான் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அந்நாட்டின் ராணுவ தலைமையக செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்பகாரி இது குறித்து விரிவான விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்கா ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களை குறிவைத்தால், ஈரான் பதிலுக்கு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் தகவல் தொழில்நுட்ப (IT) அமைப்புகள், மின்சார விநியோகக் கட்டமைப்புகள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை முடக்கும் வகையில் தாக்குதல் நடத்தும் என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம் போரானது வெறும் எல்லையோடு நிற்காமல், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளையும் பாதிக்கும் ஒரு டிஜிட்டல் போராக மாறும் அபாயம் உருவாகியுள்ளது.

மறுபுறம், ஈரானின் இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அமெரிக்க ராணுவம் தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. பென்டகன் அதிகாரிகள் ஈரானுக்கு எதிரான ராணுவ வியூகங்களை வகுத்து வருவதோடு, தேவைப்பட்டால் ஈரானுக்குள் தரைவழிப் படைகளை அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், தற்போதைக்கு படைகளை அனுப்பும் திட்டம் அதிகாரப்பூர்வமாக இல்லை என்றாலும், ஒருவேளை அத்தகைய சூழல் ஏற்பட்டால் முன்னறிவிப்பு ஏதுமின்றி அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தனது பாணியில் எச்சரித்துள்ளார்.

தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுவதால், அமெரிக்கா தனது படைகளைத் தயார் நிலையில் வைத்துள்ளது. சுமார் 2,200 கடற்படை வீரர்களுடன் கலிபோர்னியாவிலிருந்து கப்பல்கள் புறப்பட்டுள்ள நிலையில், 82-வது ஏர்போர்ன் டிவிஷன் படைகளும் உஷார் நிலையில் உள்ளன.

Related Stories: