நன்றி குங்குமம் டாக்டர்
திரைத்துறைக்குள் களமிறங்கிய குறுகிய காலத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை ப்ரீத்தி முகுந்தன். காதல் காட்சிகளே இல்லாமல், அதிரடி ஆக்சன் நாயகியாக பிளாஸ்ட் திரைப்படத்தில் நேர்த்தியான நடிப்பை தந்து ஆக்சன் குயின் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இவரது சமீபத்திய ரிலீஸ் இதயம் முரளி திரைப்படம் ஆகும். நடிகையாக மட்டுமின்றி, பரதநாட்டியக் கலைஞராகவும் திகழும் இவரது வசீகரமான தோற்றம், ஒல்லியான உடற்கட்டு என இயற்கையான அழகால் பலருக்கும் ஃபிட்னஸ் இன்ஸ்பிரேஷனாக விளங்கி வருகிறார். இவரது ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்துகொள்வோம்.
வொர்க்கவுட்ஸ் – யோகா பயிற்சியுடன் நாளை தொடங்குவதுதான் எனது தினசரி வழக்கமாகும். யோகா உடலுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குவதோடு, மன அமைதியையும் தருகிறது. இதனைத் தொடர்ந்து, சுமார் இரண்டு மணி நேரம் ஜிம் பயிற்சியில் ஈடுபடுகிறேன். அதில் நடைப்பயிற்சி, டிரெட்மில், ஸ்குவாட்ஸ், ஸ்ட்ரெச்சிங் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடலின் வலிமையையும், சகிப்புத்தன்மையையும் அதிகரித்துக் கொள்கிறேன்.
உடலின் ஒவ்வொரு தசைப் பகுதியையும் சீராகப் பராமரிக்கும் வகையில் எனது உடற்பயிற்சி முறை அமைந்துள்ளது. மேலும், பரதநாட்டியக் கலைஞராகவும் இருப்பதால், நடனப் பயிற்சியும் எனது உடற்தகுதியைப் பேணுவதில் முக்கியப் பங்காற்றுகிறது. நடனம், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இயக்கத்தை வழங்குவதோடு, அதிகப்படியான கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. இதனால்தான் எனது உடல் எடை இயல்பாகவே கட்டுக்குள் இருக்கிறது.
டயட் – உணவுப் பழக்கத்தில் நான் எப்போதும் மிகுந்த கவனத்துடன் இருப்பேன். அந்த வகையில், வீட்டில் சமைக்கப்படும் ஆரோக்கியமான உணவுகளையே அதிகம் விரும்பிச் சாப்பிடுவேன். எனது தினசரி உணவில் புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்கிறேன்.
அந்த வகையில், காலை உணவில் பழங்கள், புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய சுண்டல் வகைகள் எடுத்துக்கொள்கிறேன். மதிய உணவில் குறைந்த அளவு சாதம் அதனுடன் காய்கறிகள் என புரதச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்ற அனைத்து வகையான சத்துகளும் நிறைந்த சமச்சீரான உணவுகளை எடுத்துக் கொள்கிறேன்.
இரவு உணவை அளவோடுதான் எடுத்துக் கொள்வேன். மேலும், எளிதில் செரிமானமாகும் உணவுகளே அதில் பிரதானமாக இருக்கும். இதனால், கடுமையான டயட் முறைகளை நான் பின்பற்றுவதாக நினைக்க வேண்டாம். எனக்குப் பிடித்த உணவுகளையும் முற்றிலும் தவிர்க்காமல், அவ்வப்போது அளவோடு சாப்பிடுவேன். பொதுவாக ஃபிட்னெஸின் ரகசியம் என்றால், சமச்சீரான உணவும், போதுமான அளவு தண்ணீர் அருந்துவதும் செய்தாலே ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.
பியூட்டி – பியூட்டி சீக்ரெட் என்று எதுவும் தனியாக நான் பின்பற்றுவதில்லை, சருமப் பராமரிப்பில் எளிமையான முறைகளையே செய்கிறேன். தினமும் முகத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது மற்றும் சன்ஸ்கிரீனைத் தவறாமல் பயன்படுத்துவது போன்ற அடிப்படை சருமப் பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுகிறேன். அதிகப்படியான மேக்கப்பை விட, இயற்கையான தோற்றத்திற்கே முன்னுரிமை அளிக்கிறேன்.
அதுபோன்று, போதுமான அளவு தூங்குவது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம் என்பதில் கவனமாக இருக்கிறேன். அந்த வகையில், எந்தவித தவிர்த்தலும் இல்லாமல் குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்குகிறேன். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, முகப்பொலிவையும் அதிகரிக்கிறது. அழகாகத் தோன்றுவதற்கு வெளிப்புறப் பராமரிப்பு மட்டும் போதாது; உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
தொகுப்பு:- ஸ்ரீ தேவி குமரேசன்
