நன்றி குங்குமம் டாக்டர்
சோயா 360 டிகிரி!
சோயாசாஸ் என்ற வார்த்தை சிறு குழந்தைக்கும் மிகவும் அறிமுகமான ஒரு வார்த்தை. சீன மற்றும் ஐப்பான் உணவுகளில் பயன்படுத்தப்பட்ட சோயா சாஸ் இந்திய நாட்டின் சிறு கிராமங்களுக்கும் நன்கு பரீட்சயமாகி இருக்கிறதென்றால், அதற்கு அதன் சுவைதான் காரணம். கூடுதல் உப்பு மற்றும் மாமிச சுவைக்காக கண்டுபிடிக்கப்பட்ட சோயாசாஸ் இப்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருக்கும் உணவகங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மட்டுமல்லாமல், துரித உணவகங்கள், வீதியோரக் கடைகள் போன்றவற்றிலும் சோயாசாஸ் சேர்த்த சுவையான உணவுகள் பல வகைகளில் கிடைக்கின்றன.
சீனாவில் 2500 வருடங்களுக்கு முன்பு இருந்த சோவு வம்சத்தினர் தான் முதன் முதலாக சாஸ் பயன்படுத்தியவர்கள். மாமிசம், மீன், தானியங்கள் போன்றவற்றை நொதிக்க வைத்து, திடப் பொருளாகவும், திரவமாகவும் இல்லாமல், பசைபோல் மாற்றி உணவாகக் கொண்டனர். பிறகு, மாமிசத்திற்குப் பதிலாக சோயாபீன் பயன்படுத்தப்பட்டது. என்றாலும், இப்போதிருக்கும் அளவிற்கு அப்போது சீனாவில் சோயாசாஸ் அவ்வளவு பிரசித்தி பெற்ற உணவாக இருந்ததில்லை.
ஏழாம் நூற்றாண்டில், இந்த அரைதிட உணவு, புத்தத் துறவிகளால் ஜப்பானுக்குள் அறிமுகம் செய்யப்பட்டது. ஜப்பான் மக்கள், மாமிசத்திற்குப் பதிலாக, அவர்களுக்கு எளிதாகக் கிடைத்த சோயாபீனைச் சேர்த்து அதே முறையில் உணவு தயாரித்தார்கள். அதே நேரம், சோயாபீன் மற்றும் உப்பு சேர்த்து தயாரிக்கப்படும் “மிசோ” என்னும் உணவின் செய்முறையையும் முயற்சித்தார்கள். இந்த செய்முறையின்போது, அதிக மணமும் சுவையும் நிறமும் கொண்ட திரவம் வடிந்து வருவதைக் கண்டுபிடித்தார்கள்.
அதுதான் சோயாசாஸ் என்றானது. பிறகு கோதுமையும் சேர்த்து சாஸ் தயாரிக்க முயன்றார்கள். இவ்வாறுதான் திரவ நிலையிலிருக்கும் சோயாசாஸ் ஜப்பானில் அறிமுகமானது. இப்போதிருக்கும் சோயாசாஸ் தயாரிப்பு முறை உருவாவதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஜப்பானியர்கள்தான்.
சோயாசாஸ் சந்தை நிலவரம்
இந்திய மக்களின் உணவு விருப்பம்; தென்னிந்திய, பாரம்பரிய உணவு வகைகளின் சுவையிலிருந்து மெல்ல மெல்ல மாற்றம் அடைந்து, உலக நாடு களின் பிரசித்தி பெற்ற உணவுகளின் மீது திரும்பியது. மிகக் குறிப்பாக, சீன மற்றும் ஜப்பான் உணவுகளுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு கிடைத்தது. அதனால், அந்த உணவுகளில் சேர்க்கப்படும் சோயாசாஸ் விற்பனையும் அதிகரித்தது.
இதில் உச்சகட்டமாக, சோயாசாஸ் சேர்த்த பிரியாணி, சோயாசாஸ் சேர்த்த தந்தூரி உணவுகள், சோயாசாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் இந்தோசீனா உணவுகள் என்று இந்திய உணவுகளிலும் சோயாசாஸ் சேர்த்தே தயாரிக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில், அதிக உப்பும் அல்லது சோடியம் சேர்த்த பொருளாக இருந்ததால், ரத்த அழுத்தம் இருப்பவர்கள், உடல் நிலையில் அதிக கவனம் செலுத்துபவர்கள், துரித உணவுகளைத் தவிர்த்தனர். இதற்காகவே, இப்போதுள்ள சோயாசாஸ் நிறுவனங்கள், சோடியம் குறைவாக சேர்த்து விளம்பரம் செய்வதால், சந்தை நிலவரம் மேலும் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை.
அதுமட்டுமல்லாமல், சமைப்பதற்கும், சாப்பிடுவதற்கும் தயாராக இருக்கும் சோயாசாஸ் சேர்த்த ரெடிமேட் உணவுகள் அதிகரித்து வருவதால், அதன் நுகர்வோர் எண்ணிக்கையும் வரும் 2029 ஆண்டுக்குள் 64.1 மில்லியன் அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நுகர்வோரின் விருப்பத்தைக் கண்டுகொண்ட சோயாசாஸ் நிறுவனங்களும், காரம், மசாலா, புளிப்பு, உப்பு போன்றவற்றை அதிகரித்தும், குறைத்தும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பல வகைகளில் சோயாசாஸை தயாரித்துக் கொடுக்கின்றன.
மரபணு மாற்றம் செய்யப்படாத சோயாபீன்களில் இருந்து தயாரிக்கப் படும் ஆர்கானிக் சோயாசாஸ் வகைகளும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் பாக்கெட் செய்யப்படும் சோயாசாஸ் வகைகளும் இதன் சந்தையை அதிகப்படுத்தி இருக்கிறது. இதனால், 2030 2035க்குள்ளாக, சோயாசாஸ் சந்தை நிலவரம் 74.8 லிருந்து 93.0 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. உலகளவில், அதிகமான சோயாசாஸ் உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா முதலிடத்தில் இருக்கிறது.
வருடத்திற்கு 7.7 மில்லியன் டன் சோயாசாஸ் உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதை யடுத்து, ஐப்பான், நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் சோயாசாஸ் உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றன. ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய 2.3 மில்லியன் கிலோ அளவில் சோயாசாஸ் சீனாவிலிருந்தும் ஐப்பானில் இருந்தும் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
சோயாசாஸ் தயாரிக்கும் முறை
பாரம்பரிய முறை மற்றும் நவீன முறை என்று இரண்டு முறைகளில் சோயா சாஸ் தயாரிக்கப்படுகிறது. பாரம்பரிய முறை – சுத்தப்படுத்தப்பட்ட சோயாசாஸ் 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கப்படுகிறது. நன்றாக நீரை வடித்தபிறகு, மென்மையாகும் வரையில் 1/2 மணி நேரம் வேக வைக்கப்படுகிறது. அதே சமயத்தில், சுத்தப் படுத்தப்பட்ட முழு கோதுமை வெறும் வாணலியில் பொன்னிறமாகும் வரையில் நன்றாக வறுக்கப்பட்டு, பொடியாக அரைக்கப்படுகிறது.
சோயாபீன்ஸ் மற்றும் கோதுமைப் பொடி ஒன்றாகக் கலக்கப்பட்டு, அஸ்பர்ஜில்லஸ் என்னும் பூஞ்சைத் துகள்கள் தூவப்பட்டு, 30 -35 டிகிரி வெப்பநிலையில் 2 நாட்கள் வரையில் நொதித்தலுக்கு வைக்கப்படுகிறது. நொதித்த கலவையுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு பெரிய கலனில் மூடி வைத்து, 6 மாதங்கள் வரையில் புளிக்க வைக்கப்படுகிறது. இந்த உப்பு நீருக்கு Brine என்று பெயர். பிறகு இந்த புளித்த கலவை, மெல்லிய துணியில் வடிகட்டப்படுகிறது. இறுதி செயல் முறையாக, வடிகட்டப்பட்ட சோயாசாஸ் திரவம், நீடித்து வர வேண்டும் என்பதற்காக, சூடுபடுத்தப்பட்டு, குளிர்விக்கப்பட்டு, பாட்டிலில் அடைக்கப்படுகிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் சோயாசாஸ் தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டிருக்கும்.
நவீனமுறை சோயாபீன்ஸ் தண்ணீரில் ஊறவைக்கப்பட்டு வேக வைக்கப்படுகிறது. முழு கோதுமை வறுக்கப்பட்டு பொடியாக்கப்படுகிறது. இரண்டு பொருட்களுடன் அஸ்பர்ஜில்லஸ் பூஞ்சைப் பொடி சேர்க்கப்பட்டு 3 நாட்கள் நொதிக்க வைக்கப்படுகிறது. இந்த கலவைக்கு கோஜி (Koji) என்று பெயர். நொதித்த கலவையுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 4 அல்லது 6 மாதங்கள் வரையில் புளிக்க வைக்கப்படுகிறது. இந்த கலவைக்கு மொருமி (Morumi) என்று பெயர். பிறகு இந்தக் கலவை, வடிகட்டும் துணிகளால் சுற்றப்பட்டு, நீர்ம அழுத்தம் (Hydraulic pressure) கொடுக்கப்பட்டு சாஸ் பிரித்தெடுக்கப்படுகிறது.
பாரம்பரிய முறையில், ஒரு கிலோ கலவைக்கு 1.5 முதல் 2 லிட்டர் வரையில் சாஸ் பிரித்தெடுக்கப்படும் நிலையில், நவீன இயந்திரங்கள் மூலம் 1 கிலோ கலவைக்கு 2.5 முதல் 3.5 லிட்டர் வரையில் சாஸ் பிரித்தெடுக்கப்படுகிறது. நவீன முறையில், சோயா சாஸின் நிறமும் மணமும்; சற்று குறைந்துவிடும் என்பதால், பிரித்தெடுத்த சோயா சாஸை வெப்பப்படுத்தும்போது, கூடுதல் நிறம் சேர்ப்பதற்கு கெராமல் நிறமும், கூடுதல் சுவைக்காக அஜினோமோட்டோ எனப்படும் மோனோ சோடியம் குளுட்டாமேட் என்னும் வேதிப்பொருளும் சேர்க்கப்படுகிறது.
சோயாசாஸ் வகைகள்
சுமார் 2000 வருடங்களாக சீனாவில் சோயாசாஸ் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு chiang மற்றும் shih, chiang-yu என்ற வகைகள் இருந்தன. தமாரி வகை சோயாசாஸ் 700 கி.பி முன் shoyu அறிமுகப்படுத்தப்பட்டது. நொதித்தலுக்காக சேர்க்கப்படும் மூலப்பொருள் மாறும்போது, தயாரிக்கப்படும் சோயாசாஸின் சுவை, தன்மை, மணம், உவர்ப்புச் சுவை போன்றவையும் அதற்கேற்றவாறு மாற்றம் பெறுகிறது. எந்த வகை சாஸாக இருந்தாலும், சூரிய வெளிச்சத்திலிருந்து பாதுகாப்பாக வைத்திருந்தால்தான் அதன் தரம் நீண்ட காலத்திற்கு நன்றாக இருக்கும்.
சீன சோயா சாஸ்
சீனாவில் தயாரிக்கப்படும் சோயாசாஸில் சோயாபீன் தான் பிரதானமாக இருக்கிறது. கோதுமை அல்லது பார்லி போன்ற பிற தானிங்கள் மிகக் குறைந்த அளவே சேர்க்கப்படுகின்றன. சீன சோயாசாஸ் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகிறது.
1. காய்ச்சி எடுக்கப்படும் முறை
சோயாபீன், கோதுமை, உப்பு, தண்ணீர் சேர்த்து நொதிக்க வைத்து, அதைக்காய்ச்சி அதிலிருந்து வடிகட்ட சாஸ் எடுக்கப்படுகிறது. இதில் எவ்வித வேதியியல் சேர்மானப் பொருட்களும் சேர்க்கப்படுவதில்லை.
*மென்மையான திரவம் போன்ற சோயா சாஸ் – சோயாபீன் மற்றும் கோதுமையுடன் அஸ்பர்ஜில்லஸ் நுண்ணுயிரி சேர்த்து காய்ச்சி எடுக்கும்போது அடர்த்தியும் கொழகொழப்புத் தன்மையும் குறைவான சாஸ் கிடைக்கிறது. இது கண்ணாடி போன்று மெல்லிய திரவமாக இருக்கும். இத்திரவம் உப்புநீருடன் நொதிக்க வைக்கப்படுகிறது.
*யின் யு அல்லது யாம் யா சாஸ் – அஸ்பர்ஜில்லஸ் நுண்ணுயிரி சேர்த்து ஆவியில் வேகவைக்கப்பட்ட சோயாபீன் காய்ச்சப்பட்டு, திரவம் வடிகட்டப்பட்டு பின்னர் உப்புநீரில் சேர்க்கப்படுகிறது. இந்த சாஸ் அடர்த்தியான நிறத்தையும் மணத்தையும் கொடுக்கிறது.
2. கலவை மூலம் தயாரிக்கப்படும் சாஸ்
சோயா சாஸ் காய்ச்சி எடுக்கும் இறுதி கட்டத்தில், இனிப்பு, உமாமி என்னும் மாமிச சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டு வித்தியாசமான சுவையில் தயாரிக்கப்படும் சாஸ். இதில் இரண்டு வகைகள் உள்ளன. அடர்த்தியான நிறமுள்ள பழைய சாஸ் – மென்மையான திரவமாகத் தயாரிக்கப்பட்ட, அடர்த்தியும், நிறமும் குறைவான சோயாசாஸ் மற்றும் கராமல் என்னும் அடர்த்தியான சர்க்கரைப்பாகு சேர்க்கப்பட்டு பல மாதங்களுக்கு பதப்படுத்தப்பட்டு அடர்த்தியும் நிறமும் அதிகமுள்ள சாஸாக மாற்றப்படுகிறது. இதனுடைய நிறமும் மணமும் சமைக்கும்போது மிக அதிகமாக வெளியேறுகிறது.
3. காய்ச்சாமல் தயாரிக்கப்படும் சாஸ்
சோயாபீன்களைப் பயன்படுத்தாமல், சோயா புரதத்திலிருந்து அமில நீர்பகுப்பு முறையில் நேரடியாக சாஸ் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த தயாரிப்பு முறைக்கு மூன்றே நாட்கள் போதுமானது என்பதுடன், தயாரிக்கப்பட்ட சோயாசாஸ் மற்ற சாஸ் வகைகளிடமிருந்து மாறுபட்டு, சிறப்பான சுவை மற்றும் மணத்துடன் இருக்கிறது. இதன் ஆயட்காலமும் அதிகம்.
ஜப்பானிய சோயா சாஸ் வகை
ஏழாம் நூற்றாண்டு காலகட்டத்தில், சீனாவிலிருந்து வந்த புத்தமதத் துறவிகளால் ஜப்பானில் Shoyu என்னும் சோயா சாஸ் அறிமுகமானது. இந்த வகை சாஸில் கோதுமை சேர்ப்பதுடன், சிறிதளவு அல்கஹாலும் சேர்க்கப்படுகிறது. தமாரி என்னும் மற்றுமொரு ஜப்பானிய சோயா சாஸ் வகை அடர்த்தியான நிறத்தையும் தனிப்பட்ட மணமும் கொண்டிருக்கிறது. கோதுமை சேர்த்தும், சில வகைகளில் தவிர்த்தும் தயாரிக்கப்படும் சாஸ் வகையே அனைத்தைiயும் விட தரமான உண்மையான சுவை கொண்ட சாஸ் எனக் கருதப்படுகிறது. ஷிரோ என்ற சோயாசாஸ் குறைந்த அளவு சோயாபீன் மற்றும் அதிகளவு கோதுமை கொண்டு தயாரிக்கப்படு வதால், சற்று அதிகமான இனிப்புச் சுவையைக் கொண்டிருக்கிறது.
இந்தோனேசிய சோயாசாஸ் வகை
இந்தோனேசியாவில் சோயாசாஸ் கெகேப் என்றழைக்கப்படுகிறது. தயாரிப்பின்போது, பனைவெல்லம் சேர்க்கப்படுவதால், அதிக இனிப்புச் சுவை கொண்டது. அடர் நிறம் கொண்ட இந்த சாஸ் இந்தோனேசியாவின் பிரதான உணவுகளில் மிக முக்கிய வாசனைப் பொருளாக உபயோகிக்கப்படுகிறது.
பிற சோயா சாஸ் வகைகள்
சீனா, ஜப்பான் தவிர, பிற நாடுகளிலும் சோயாசாஸ் நல்ல தரத்தில் தயாரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. கொரியாவில் நேரடியாக சோயா சாஸ் தயாரிக்கப்படாமல், டன்ஜங் என்ற நொதிக்க வைத்து அரைத்த சேயாபீன் பசை தயாரிப்பின்போது கிடைக்கும் உபரிப் பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது.தைவானில், கருப்பு நிறத்தில் இருக்கும் சோயாபீன்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால், சாஸ் அடர் கருப்பு நிறத்தில் இருக்கிறது. பிற வகை களைப் போலல்லாமல், இந்த கருப்பு நிற சோயா சாஸ் தயாரிப்பதற்கு 6 மாதங்கள் ஆகிறது.
சோயா சாஸில் கிடைக்கும் சத்துக்கள்
சோயாசாஸ் என்பது சுவை கூட்டும் பொருட்களின் வகைப்பாட்டில் வருவதால், பயன்படுத்தும் அளவும் குறைவாகவே இருக்கும். இதனால், இதிலிருந்து கிடைக்கும் சத்துக்களும் குறைவுதான். ஒரு தேக்கரண்டி சோயா சாஸில் 8 -10 கிலோ கலோரியும், 1 கிராம் புரதமும் 1 கிராமுக்கும் குறைவான கார்போஹைடிரேட்டும், 900 மி.கிராம் சோடியமும்; இருக்கிறது. உப்புநீரில் ஊறவைத்து தயாரிக்கப்படுவதால், சோயா சாஸில் பிற சத்துக்களைவ விட சோடியம் அதிகம்.
இந்த அளவிலான சத்துக்களைவிட பல மடங்கு சத்துக்களை பிற உணவுகளிலிருந்து பெறமுடியும் என்றாலும் சுவைக்காகவும் மணத்திற்காகவும் மட்டுமே சோயா சாஸ் உணவில் சேர்க்கப்படுகிறது. சோயா பீனில் இயற்கையாகவே ஐசோபிளேவோன் என்னும் நுண்சத்துக்கள் இருப்பதால் அவை சாஸிலும் சிறிது இருக்கிறது. இவை பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகளை சரிசெய்கின்றன என்றாலும் அதிகப்படியான சோடியம் இருப்பதால் தொடர்ச்சியாகவோ அல்லது அதிக அளவோ உணவில் பயன்படுத்த முடியாது.
சோயா சாஸால் ஏற்படும் உடல் நலக் கேடுகள்
உணவுகளில் சோயா சாஸ் மிகச் சிறி தளவே பயன்படுத்தப்பட்டாலும் அதிலிருக்கும் உப்பு அதிகமானது. இதற்குக் காரணம் சாஸ் தயாரிக்கப்படும் முறைதான். சோயா சாஸ் தயாரிக்கும்போது பூஞ்சை வராமலிருக்கவும் சுவையை அதிகரிக்கவும் ஆயட்காலம் அதிகமாக இருக்கவும் அடர்த்தியான உப்புக் கலவை சேர்க்கப்படுகிறது. வேகவைத்து நொதிக்கப்பட்ட சோயா பீன் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 கிராம் அளவில் உப்பு சேர்க்கப்பட்ட கலவையில் பல மாதங்களுக்கு பதப் படுத்தி வைக்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் உணவில் பயன்படுத்தப்படும் 100 கிராம் சோயா சாஸில் 5.4 கிராம் சோடியம் இருக்கிறது. இவையெல்லாம் ஒருவர் ஒரு நாளைக்கு 5 கிராமிற்கும் குறைவாக உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைக்கும் அதிகமான அளவுதான். அதிலும் அடிக்கடி சோயா சாஸ் சேர்த்த துரித உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுபவர்களின் உடலில் நிச்சயம் உப்பின் அளவு அதிகரிக்கச் செய்யும்.இதனால் இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிப்பது மட்டுமல்லாமல் சிறுநீரக நோய்கள் வருவதற்கும்
வாய்ப்புகள் உண்டு.
வேதிப்பொருட்கள் பயன்படுத்தி, நீராற்பகுப்பு முறையில் சோயா சாஸ் தயாரிக்கப்படும் நிலையில் விரைவாக தயாரிக்க வேண்டும் என்பதற்காக அதிக வெப்பநிலையில் ஹைடிரோகுளோரிக் அமிலம் பயன்படுத்தப்படும். அச்சமயம், சோயாவிலுள்ள கொழுப்பு குளோரைடு அயனியுடன் வினைபுரிந்து குளோரோ புரோபனால் என்னும் வேதிப்பொருளை உருவாக்குகிறது. இப்பொருள் தொடர்ச்சியாகவோ அடிக்கடியோ அல்லது அளவிற்கு அதிகமாகவோ மனித உடலுக்குள் செல்லும்போது சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்னைகள் ஏற்படுத்தும் என்று உணவு சேர்மானங்களுக்கான வல்லுநர் குழு எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கை முறையில் நொதிக்க வைக்கப்பட்ட சோயா சாஸில் இந்த வேதிப்பொருள் உருவாவதில்லை. அது மட்டுமல்லாமல், சோயாசாஸ் நொதித்தல் முறையில், ஹிஸ்டமைன் மற்றும் டைரமைன் என்னும் பொருட்களும் உருவாகின்றன. அடிக்கடி ஒற்றைத் தலைவலி அல்லது உணவுப் பொருட்கள் ஒவ்வாமை உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு இப்பொருட்கள்மேலும் சிக்கலைக் கொடுக்கும்.
கலப்படம் செய்யப்படும் சோயா சாஸ்
சோயா சாஸ் தயாரிப்பின்போது, நொதிக்க வைத்த கலவையை உப்பு நீரில் சேர்க்கும்போது, அளவுக்கு அதிகமான மணம், நிறம் சேர்ப்பதும், ஹைடிரோ குளோரிக் அமிலத்தால் உடைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட தாவர புரதம் சேர்ப்பதும் பரவலாகக் காணப்படும் கலப்பட முறைகள். இவை மட்டுமல்லாமல், அதிக நீர் சேர்த்த திரவத்துடன், கெராமல் நிறம் சேர்ப்பதும், சோள ஸ்டார்ச் மற்றும் அக்ரூட் மாவு சேர்த்து தரம் குறைந்த சோயா சாஸ் தயாரிப்பதும் அதிகரித்துள்ளது. இவ்வாறாக தயாரிக்கப்பட்ட, தரம் குறைவான, கலப்பட சோயாசாஸ், புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய நுண்ணிய வேதிப்பொருட்களை உருவாக்குவதாக உலக சுகாதார நிறுவனமும், ஐரோப்பிய உணவுப் பாதுகாப்புக் கழகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: உணவியல் நிபுணர் வண்டார் குழலி
