கின்ஷாசா: மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் ருபாயா என்ற இடம் உள்ளது. இங்கு கோல்டான் என்ற உலோக தாது சுரங்கம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கத்தின் பல பகுதிகள் இடிந்து விழுந்தன. அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் உட்பட 200 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. நிலச்சரிவில் சிக்கிய உடல்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மழைக்காலம் என்பதால் அங்குள்ள மண் மிகவும் பலவீனமாக இருந்ததே இந்த நிலச்சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 227 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
