நன்றி குங்குமம் டாக்டர்
உடல் வலிமை தரும் பழங்களில் விளாம்பழம் தனித்துவம் வாய்ந்தது. விளாம்பழம் செரிமானத்தை மேம்படுத்துகிறது, பித்தத்தைக் குறைக்கிறது, கண் பார்வையைத் தெளிவாக்குகிறது, பற்களை வலுப்படுத்துகிறது, நரம்புத்தளர்ச்சியை நீக்குகிறது, வறட்டு இருமல் மற்றும் சுவாசப் பிரச்னைகளை சரிசெய்கிறது, குழந்தைகளுக்கு நினைவாற்றலை அதிகரிக்கிறது என பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது.
விளாம்பழத்தை பழுத்த நிலையில்தான் சாப்பிட வேண்டும். ருசியான சதைப் பகுதியில் புரதம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. விளாம்பழத்துடன் சிறிது சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
விதை, இலை, பட்டை என அனைத்து பகுதிகளிலும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. அதனால் எலும்பு மற்றும் பற்களை வலுடையச் செய்கிறது. வயதானவர்கள் விளாம்பழம் சாப்பிட்டு வர, ஆஸ்டியோபொரோஸிஸ் எனும் எலும்பு நோய் பாதிக்காமல் இருக்கும். பற்கள் வலிமையாகும். செரிமான சக்தியை அதிகரிக்கும். ரத்தம் விருத்தியாகும்.
பழுக்காத விளாங்காயைத் தண்ணீர் விட்டு வேக வைத்து, அதை உடைத்து உள்ளே உள்ள சதைப்பகுதியை காலை வேளையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர சீதபேதி குறையும். இதயத்திற்கு பலத்தைத் தரும்.
நரம்புகளுக்கு வலிமையைத் தரும். அதிக சுண்ணாம்பு சத்து கொண்ட இதில் மிக உயிர்சத்து உள்ளது. இதனால் நரம்புகளுக்கும், இதயத்திற்கும் பயனளிக்கும்.
பித்தத்தால் தலைவலி, கண்பார்வை மங்கல், மஞ்சளாக வாந்தி எடுத்தல், வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை, கால்களில் அதிக வேர்வை, இளநரை நாவில் ருசியற்ற நிலை இவைகளை விளாம்பழம் கட்டுப்படுத்தும்.
இதனுடன் வெல்லம் சேர்த்து 21 நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் தொடர்பான அனைத்து கோளாறுகளும் நீங்கும். முக அழகை மேம்படுத்தும். ரத்தத்தில் உள்ள நச்சுகளை அழிக்கும் தன்மை கொண்டது.
விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு.
பனங்கற்கண்டுடன் விளாம்பழத்தை சாப்பிட, பித்தக் கோளாறுகளால் உண்டாகும் வாந்தி, தலைச் சுற்றல் தீரும்.
தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். விளாம் மரத்தின் இலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்துக் குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விளாம் மரத்தின் பிசினை அடிக்கடி சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் தீரும்.
தொகுப்பு: மகாலட்சுமி
