×

கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு: பிப்ரவரி 13ம் தேதி சென்னையில் விழா

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுகளுக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் மற்றும் 2014ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விருதுகளை வரும் பிப்ரவரி 13ம் தேதி மாலை 4.30 மணியளவில், சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு அரசின் சார்பில், சமுதாய சிந்தனைகளுடன் கூடிய மனித நல்லுணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்கப்படுத்தும் வகையில், சிறந்த தமிழ் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகையர், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு திரைப்பட விருதுகளும், அதுபோல் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த நெடுந்தொடர்கள், சிறந்த கதாநாயகன்,

சிறந்த கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு சின்னத்திரை விருதுகளும், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், மாணவர்கள் தயாரிக்கும் சிறந்த குறும்படங்களுக்கு மாணவர் விருதுகளும் தொடர்ந்து வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இடையில் வழங்கப்படாமல் இருந்த விருதுகள் அனைத்தையும் வழங்கிட ஆணையிட்டார். அதன்படி, 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுகள் வரை வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகள் 183 திரைத்துறையை சார்ந்த விருதாளர்களுக்கு கடந்த 4-9-2022 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக 2015ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் 34 விருதாளர்களுக்கும், 2014-2015ம் கல்வியாண்டுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் 5 விருதாளர்களுக்கும் 6-3-2024 அன்று சென்னை அடையாறு முத்தமிழ் பேரவையில் நடந்த விழாவில் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.

அதை தொடர்ந்து, முதல்வரின் வழிகாட்டுதலின்படி 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளுக்கான சிறந்த தமிழ் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகைகள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் 2014ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு சின்னத்திரை விருதுகளுக்கான சிறந்த நெடுந்தொடர்கள், கதாநாயகன், கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர்,

ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட சின்னத்திரை விருதுகளும், 2015-2016ம் கல்வியாண்டு முதல் 2021-2022ம் கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளும் தேர்வு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ‘மாநகரம்’, ‘அறம்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘அசுரன்’, ‘கூழாங்கல்’, ‘ஜெய் பீம்’, ‘கார்கி’ ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சின்னத்திரை விருதுகளுக்காக நடிகர்கள் எம்.ராஜ்குமரர், ஆர்.பாண்டியராஜன், கவுசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ.சஞ்சீவ், ஜெய் ஆகாஷ், கார்த்திக் ராஜ், சஞ்சீவ் ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகர்களாகவும், நடிகைகள் ஆர்.ராதிகா சரத்குமார், வாணி போஜன், நீலிமா ராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானா ஷாஜகான், கேபிரில்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிறந்த நெடுந்தொடர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், 2ம் பரிசாக ரூ.1 லட்சமும், 3ம் பரிசாக ரூ.75 ஆயிரமும், சிறப்பு பரிசாக ரூ.75 ஆயிரமும், பெண்களை பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்துக்கு சிறப்பு பரிசு ரூ.1.25 லட்சமும் வழங்கப்படுவதுடன், சிறந்த நடிகர், நடிகையர், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சின்னத்திரை சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், 2ம் பரிசாக ரூ.1 லட்சமும், ஆண்டின் சிறந்த சாதனையாளர் பரிசாக ரூ.1 லட்சமும், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படுவதுடன், சிறந்த கதாநாயகன், கதாநாயகி, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் அனைத்தையும் முதல்வரின் ஆணையின்படி, வரும் பிப்ரவரி 13 அன்று மாலை 4.30 மணியளவில், சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பாராட்டுகிறார்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Government Film and Small Screen Awards ,Chennai ,Tamil Nadu Government Film Awards ,Small Screen Awards ,Kalaivanar… ,
× RELATED ஜவுளி நிறுவனங்கள் பின்னலாடை...