×

இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்ன? இனி விலை குறைய வாய்ப்பு உண்டா என்பது குறித்து நகை வியாபாரிகள் விளக்கம்

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வுக்கு காரணம் என்ன என்பதற்கு நகை வியாபாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தங்கம், வெள்ளி விலை எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால், நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஜெட் வேக விலை என்ன காரணம். இன்னும் விலை ஏற்றம் தொடருமா? அல்லது விலை குறைய வாய்ப்பு உண்டா என்பது குறித்து நகை வியாபாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ெஜயந்திலால் கூறியதாவது: தங்கம் விலை உயர்வுக்கு முன்பு எல்லாம் பல காரணங்கள் இருந்தது. போர் பதற்றமான சூழ்நிலை, நோய்களின் தாக்கம் என்று இருந்தது. இப்போது பார்த்தீர்கள் என்றால் மிகப்பெரிய அளவில் வர்த்தக போர் நடந்து வருகிறது. வர்த்தக போர் தொடங்கிய நாளில் இருந்து பார்த்தீர்கள் என்றால் தங்கத்தின் விலை பெரிய அளவில் உயர்ந்து வருகிறது.

விலை உயர்வுக்கு முக்கிய காரணம், ஈரானை நோக்கி அமெரிக்காவின் போர்க்கப்பல் சென்று கொண்டிருக்கிறது. அது அங்கே போய், அங்கு சிறு அசம்பாவிதம் நடத்தால் கூட இன்னும் பெரிய அளவில் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும். போர் ஏற்பட்டால் அமெரிக்காவின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை நோக்கி செல்லும். அப்படி வீழ்ச்சியை நோக்கி சென்றால் அமெரிக்கா தனது டாலரின் மதிப்பை இழக்கும். அது போன்ற காரணங்களால் தொடர்ந்து டாலரில் முதலீடு செய்யாமல், தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

இதனால் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. இனி தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை. இதற்கு முன்பு எப்போது எல்லாம் தங்கம் விலை அதிகரித்ததோ? அப்போது எல்லாம் ஒரு கரெக்சன் ஏற்படும். அதாவது, ஆயிரம் ரூபாய் ஏறி இருந்தால், ஒரு இருநூறு ரூபாய் குறையும். இந்த முறை அது வருவதற்கு வாய்ப்பு குறைவு. காரணம் என்னவென்றால், இப்போது முதலீடு செய்துள்ளவர்கள் எல்லாமே, பல நாடுகளில் உள்ள ரிசர்வ் வங்கிகள் முதலீடு செய்துள்ளது.

அதாவது, தங்களிடம் கையிருப்பாக உள்ள அன்னிய செலவாணியாகிய கையிருப்பில் உள்ள அமெரிக்க டாலரை தங்கமாக மாற்றியிருக்கிறார்கள் அது ஒரு காரணம். அதே போல பல நாடுகளில் உள்ள கருவூலகங்கள் தங்களிடம் உள்ள உபரியாக உள்ள அமெரிக்க டாலர்களையும் தங்கமாக மாற்ற தொடங்கியிருக்கிறார்கள். இவற்றின் மூலம் தங்கம் மீண்டும் மறுவிற்பனைக்காக சந்தைக்கு வராது.

அதனால், தங்கம் விலை இனி வரும் காலங்களில் விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை. இன்னும் சொல்ல முடியாத அளவு உச்சத்தை நோக்கி செல்லும். தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் மிகப்பெரிய அளவில் உயரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் விலை எப்போது எல்லாம் ஏறுகிறதோ? அப்போது எல்லாம் நுகர்வோர் ஒரு நிதான போக்கை கடைப்பிடிப்பார்கள்.

அதே மாதிரியான போக்கு தான் இப்போது இருக்கிறது. மீண்டும் ஒரு சமன் நிலைக்கு வந்த பிறகு, தங்கத்தின் மீது முதலீடு செய்வதோ? தங்கத்தை வாங்குவதோ இருக்கும். இந்த விலையில் வாங்குவார்களா? என்ற கேள்வியும் உள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தார்கள். இந்த வருடம் இன்னும் குறைக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். ஆனால், வருகிற பட்ஜெட் அதற்கான வாய்ப்பு குறைவு. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai ,
× RELATED ஜவுளி நிறுவனங்கள் பின்னலாடை...