சென்னை: உலகளாவிய கல்வி உச்சி மாநாட்டில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது: கலைஞர், ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்காக ஒரு குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவருக்கு 5 சதவீதம் கூடுதல் மதிப்பெண் வழங்கும் புரட்சிகரமான திட்டத்தை செயல்படுத்தி குடும்பத்தின் முதல் பட்டதாரியை உருவாக்கினார். மேலும், பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வை ரத்து செய்து கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பொறியியல் படிப்புகளில் சேர வழிவகை செய்தார்.
இந்நிலையில், தற்போதுள்ள நமது முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள் படிக்கும் போதே தொழில் முனைவோராக பயிற்சி பெற ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். தமிழ்நாட்டு மாணவர்கள் இந்திய மாணவர்களுடன் அல்லாமல் உலக மாணவர்களுக்கு இணையான கல்வித் தரத்தை கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியா போன்ற மேலை நாட்டு மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்கின்றனர்.
கல்விதான் அறிவு ஒளியின் உச்சம் என்று உணர்ந்த நமது முதல்வர், உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். உயர்கல்வித்துறையின் ஒவ்வாரு நிகழ்வுகளிலும் முதல்வர், மாணவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதார கொண்ட மாநிலமாக மாற்றுவதற்கு ஒரு துணிச்சலான இலக்கை முன்வைத்துள்ளார்.
இந்த இலக்கை வெறும் உள்கட்டமைப்பு மூலம் மட்டும் அடைய முடியாது. அதற்கு திறமையான மனித வளம், முன்னணி ஆராய்ச்சி, புத்தாக்கச் சூழல்அமைப்புகள், உலகளவில் போட்டித் தன்மை கொண்ட பல்கலைக் கழகங்கள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வாய்ப்புகள் ஆகியவற்றின் மீது கட்டியெழுப்ப வேண்டும்.
எனவே உயர்கல்வி என்பது ஒரு துணைத் துறை அல்ல. மாறாக டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தின் உந்துசக்தி. நீதியுடன் கூடிய வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய புத்தாக்கம் மற்றும் அனைவருக்கும் வாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதிராவிட மாதிரியின் உணர்வில், இந்த எதிர்காலத்தை எங்களுடன் இணைந்து உருவாக்க தமிழ்நாடு உலகை அழைக்கிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
