×

தமிழ்நாடு புராதன சின்னங்கள் ஆணையம் ஏன் அமைக்கவில்லை? புராதன கோயில்களில் கட்டுமான பணிகளுக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் முன்பு வணிக வளாகம் கட்ட தடை கோரிய வழக்கில், தமிழ்நாடு புராதன சின்னங்கள் ஆணையம் அமைப்பது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் எஸ்.சவுந்தர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, புராதன சின்னங்கள் ஆணையம் தொடர்பான விதிகள் வகுக்கப்பட்டு விட்டது என்று இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்று பத்திரிகைகளில் ஏன் விளம்பரம் கொடுக்கவில்லை?ஆணையம் அமைக்க விரும்பவில்லை என்றால் அதனை நீதிமன்றத்தில் தெரிவித்துவிடலாம் என்று கூறினர்.

இதை மறுத்த அறநிலையத் துறை தரப்பு வழக்கறிஞர், ஆணையம் அமைப்பதற்கு வேண்டுமென்றே காலதாமதம் செய்யவில்லை. ஆணையத்துக்கு பணியாளர்கள் நியமிப்பது தொடர்பாக அரசின் ஒப்புதல் பெற வேண்டி உள்ளதால் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் இதுவரை 5 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், புராதன சின்னங்கள் ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று நான்கு முன்னணி தமிழ் நாளிதழ்கள் மற்றும் இரண்டு ஆங்கில நாளிதழ்களில் ஒரு வாரத்தில் விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் விண்ணப்பிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கி, அதன்பின் விண்ணப்பங்களை பரிசீலித்து மூன்று நபர்களை தேர்வு செய்து சீல் வைத்த உறையில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அதுவரை புராதன கோயில்களில் எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். முன்னதாக தமிழகத்தில் மட்டுமே தொன்மை வாய்ந்த கோயில்கள், கட்டிடங்கள் அமைந்துள்ளன என்றும் வேறு எங்கும் இதுபோன்ற கட்டிடங்கள் இல்லை. நமது முன்னோர் கட்டிய இதுபோன்ற கட்டிடங்களை நாம் மீண்டும் அமைக்க முடியாது. அவற்றை பாதுகாக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

Tags : Tamil Nadu Archaeological Monuments Commission ,Chennai ,Arunachaleswarar temple ,Tiruvannamalai ,Madras High Court ,Tamil Nadu government ,Tamil Nadu Archaeological Monuments Commission… ,
× RELATED ஜவுளி நிறுவனங்கள் பின்னலாடை...