- யூனியன் அரசு
- ஈழம்
- திருமாவளவன்
- சென்னை
- முத்துக்குமார்
- எஸ்.ஆர்.பி காலனி பேப்பர் மில்ஸ் சாலை
- கொளத்தூர்
- மதிமுக
- பொதுச்செயலர்
- வைகோ
- விடுதலை சிறுத்தைகள் கட்சி
- சத்யராஜ்…
சென்னை: ஈழத் தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமாரின் 17ம் ஆண்டு நினைவஞ்சலி கொளத்தூர் எஸ்ஆர்பி காலனி பேப்பர் மில்ஸ் ரோடு பகுதியில் நேற்று அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நடிகர் சத்யராஜ் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு முத்துக்குமாருக்கு நினைவஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு குறிப்பாக பாஜ அரசு ஈழத் தமிழர்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ளவே தயங்குகிறது. பிற நாடுகளில் இருந்து இஸ்லாமியர்களை தவிர வேறு யார் வந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்வது குடியுரிமை வழங்குவது என அந்த சட்டம் சொல்கிறது. ஆனால் இந்துக்கள் என்கின்ற வரையறையில் கூட ஈழத் தமிழர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.
இலங்கையிலிருந்து வந்த நபர்கள் இந்துக்களாக இருந்தால் கூட அவர்களுக்கு குடியுரிமை தர மாட்டோம் என்கின்ற ஒரு நிலைப்பாட்டை பாஜ அரசு மேற்கொண்டுள்ளது. அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி அவ்வப்போது சுட்டிக்காட்டி கண்டித்து வருகிறது. அதனை திருத்தம் செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறோம். ஈழத் தமிழர்கள் விரும்பினால் இந்திய குடியுரிமை வழங்குவதில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்கின்ற கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து முன்வைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தமிழ் ஈழ விடுதலைக்காக ஜனவரி 29ம் தேதி சாஸ்திரி பவனில் உடம்பில் தீ வைத்து கொண்ட முத்துக்குமாருக்காக ஆண்டுதோறும் ஜனவரி 29ம் தேதி நினைவஞ்சலி செலுத்தி வருகிறோம். முத்துக்குமாருக்கு அவரது உருவம் பொறித்த ஒரு தூண் வைக்கப்பட வேண்டும் என கேட்டு உள்ளனர். தமிழக முதல்வருக்கு இந்த கோரிக்கையை எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம். ஈழப் பிரச்னை முடியவில்லை. அது புதிய பரிணாமத்தில் உருவாகும். புதிய வடிவம் எடுக்கும். தமிழர்களின் தியாக வரலாறு தரணியெங்கும் தெரிய வேண்டும் என்றார்.
