சென்னை: தமிழ்நாட்டில் 45 சதவீத மக்கள் ஆதரவு இருப்பதால், திமுக தலைமையிலான கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதில் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி நீடிக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக (அ), அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
முந்தைய தேர்தலில் அளிக்கப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருப்பதால் திமுக கூட்டணிக்கு இம்முறை அமோக மக்கள் ஆதரவு நிலவுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் இணைந்து மக்கள் மனநிலை குறித்து கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது.
அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு 45 சதவீத மக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணிக்கு 33 சதவீத மக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. தவெக உள்ளிட்ட இதர கட்சிகள் அனைத்தும் சேர்த்து 22 சதவீத வாக்குகள் மட்டுமே உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிமுக கூட்டணியை விட 12 சதவீத மக்கள் ஆதரவு அதிகமாக உள்ள திமுக கூட்டணியே மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2024 மக்களவை தேர்தலின் போது பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 41 சதவீத மக்கள் ஆதரவு இருந்த நிலையில் தற்போது அது 33 சதவீதமாக சரிந்துள்ளது. அதே சமயம், இதர கட்சிகளின் வாக்கு சதவீதம் 12 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனவே, அதிமுக கூட்டணியின் வாக்குகள் சிதறுவதையும், திமுகவின் பலம் சற்றும் குறையாமல் நீடிப்பதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.
