சென்னை: அசுர வேகத்தில் தங்க விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில், இன்று ஒரே நாளில் ஒரு சவரன் ரூ.9,520 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதனால் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
சர்வதேச நிச்சயமற்ற சூழலால் கடந்த ஆண்டு பங்குச்சந்தை பெரியளவில் லாபம் கொடுக்கவில்லை. இந்தாண்டும் கூட அதே நிலைமை தான் தொடர்கிறது. ஆனால், மறுபுறம் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் வேகமாக உச்சம் தொட்டு வருகிறது. தங்கம் விலை பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதோடு சேர்த்து அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகள் மற்றும் பலவீனமான டாலர் போன்ற காரணங்களால் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.
ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை கடந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் வட்டி விகிதம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ள நிலையில், அந்த முடிவுகள்தான் தங்கத்தின் விலையை தீர்மானிக்கவுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தங்கம் விலை அசுர வேகத்தில் ஏறி வருகிறது. அதுவும் கடந்த 16ம் தேதியில் இருந்து தாறுமாறாக எகிறி வருகிறது.
தினமும் விலை அதிகரித்து புதிய உச்சத்தை பதிவு செய்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சாமானியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400 என வரலாற்றில் புதிய உச்சத்ைத தொட்டுள்ளது.. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.1190 உயர்ந்து ரூ.16,800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த 19ம் தேதி ஒரு சவரன் ரூ.1,07,600க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரன் ரூ.26,800 அதிகரித்துள்ளது.
* வெள்ளி விலையும் புதிய உச்சம்
தங்கத்தின் விலையைவிட வெள்ளி விலை வெகு வேகமாக ஏற்றம் கண்டு வருகிறது. தங்க விலையேற்ற சதவீதத்துடன் ஒப்பிடுகையில் வெள்ளி விலையேற்ற சதவீதம் மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் (27ம் தேதி) கிராமுக்கு ரூ.12 அதிகரித்து ரூ.387க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ரூ.13 உயர்ந்து முதன்முறையாக ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.400ஐ தாண்டியுள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.425க்கு விற்பனையாகிறது.
