துணை முதல்வர் அஜித்பவார் மரணம்: விமான விபத்துக்கு காரணம் பனி மூட்டமா..? தொழில் நுட்பக் கோளாறா..? பாறையின் மீது மோதி வெடித்துச் சிதறிய பின்னணி

பாராமதி: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார், இன்று காலை புனே மாவட்டம், பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது அவரது தனி விமானம் விபத்துக்குள்ளானது. இந்த துயரச் சம்பவத்தில் அஜித்பவார் உட்பட விமானத்தில் பயணித்த ஆறு பேரும் உயிரிழந்தனர். விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த இந்த தனி விமானம், சுமார் 16 ஆண்டுகள் பழமையான ‘பம்பார்டியர் லியர்ஜெட்’ ரகத்தைச் சேர்ந்த நடுத்தர வணிக ஜெட் ஆகும். இந்த விமானம் மும்பை விமான நிலையத்திலிருந்து காலை 8.10 மணிக்கு பாராமதிக்குக் கிளம்பியது.

விமானத் தரவுகளின்படி, விமானம் 8.30 மணியளவில் பாராமதியை அடைந்து, கடுமையான பார்வைக் குறைபாடு காரணமாக முதல் தரையிறங்கும் முயற்சியை ரத்து செய்தது. இரண்டாவது முறையாக சரியாக 8.45 மணியளவில் தரையிறங்க முயன்றபோது, விமானம் ஸ்திரத்தன்மையை இழந்து கடும் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. விமான ஓடுதளத்தின் அருகில் விலகிச் சென்ற விமானம், 11ம் எண் கொண்ட ஓடுதளத்தின் தொடக்கப் பகுதிக்கு அருகில் இருந்த பாறையின் மீது மோதி உடனடியாகத் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.

ஆரம்பக்கட்ட விசாரணையில், பாராமதி பகுதியில் நிலவிய அடர்ந்த பனி மூட்டம் மற்றும் தரையிறங்கும் போது ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு ஆகியவற்றின் கலவையே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனப் புள்ளி விபரங்களுடன் கூடிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தத் துயரச் சம்பவம் குறித்து விமான விபத்து விசாரணைப் பணியகம் மற்றும் பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆகியவை முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளன. விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய உயர்மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த உயிரிழப்புச் செய்தி வெளியானதை அடுத்து, நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

நாட்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அஜித்பவாரின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மகாராஷ்டிரா அரசு மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், விபத்துக்கான காரணம் விரைவில் கண்டறியப்பட்டு வெளியாகும் என்றும் அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: