சென்னை: ஜனநாயகன் படத்தில் அன்னிய சக்திகள் நாட்டில் பிரச்னை ஏற்படுத்துவது போலவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது போலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்ட புகார் தீவிரமானது. படத்தை திரையிடும் முன்பு இதுசம்பந்தமாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதால், படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவில், அந்நிய சக்திகள் நாட்டில் மத பிரச்னையை உருவாக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புகார் தீவிரமானது.
அதனால்தான் படத்தை திரையிட அனுமதிக்கும் முன்பு இதை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து படம் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சென்சார் போர்டுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காதது தவறு. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவது குறித்த முடிவு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த முடிவுக்கு எதிராக கோரிக்கை வைக்காமல் பட நிறுவனம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. கோரிக்கை வைக்காத நிலையில் முடிவை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவு தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
* பவர் இல்லாத காங்கிரசுக்கு பவர் வேணுமா…!
காங்கிரஸ் கட்சி பாரம்பரியம் வாய்ந்த கட்சி. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி. அந்த கட்சியோட நிலைமை இப்ப எப்பிடி இருக்கு. படிப்படியா தேஞ்சு போயி, பவர் இல்லாம கிடக்கு. காங்கிரஸ் கட்சிக்கு மறுபடி பவர் வரணுமுன்னா எங்க கூட சேரணும். எங்க கூடன்னா, விஜய் கட்சி கொடுக்கிற வாய்ப்ப பயன்படுத்திக்கனும்னு சொல்றேன்.. – தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்
