ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் விகிதம் குறைப்பு: அரசாணை வெளியீடு

சென்னை: ஒன்றிய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 1 முதல் 8ம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் கட்டாயம் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் 150 மதிப்பெண்களுக்கு நடத்துகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும் தேர்வர்கள் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் என்பது, பொதுபிரிவிற்கு 60 சதவீதம் அல்லது 90 மதிப்பெண் என்று இருந்தது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், அருந்ததியர், இஸ்லாமியர் மற்றும் மாற்று திறனாளிகள் என இட ஒதுக்கீட்டு பிரிவு தேர்வர்களுக்கு 55 சதவீதம் அல்லது 82.5 மதிப்பெண் என குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக இருந்தது.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அரசுக்கு அனுப்பிய பரிந்துரை அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இஸ்லாமியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 50 சதவீதம் அல்லது 75 மதிப்பெண் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியினர் பிரிவு தேர்வர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதம் அல்லது 60 மதிப்பெண் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெற்ற தேர்வு எழுதிய தேர்வர்களுக்கும் பொருந்தும். ஆசிரியர்களாக தொடர்வதற்கு தகுதி தேர்வு எழுத உள்ள ஆசிரியர்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது: பல லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் கனவுகளோடு காத்திருக்கும் தேர்வர்களுக்கும் பலனளிக்கும் வகையில் இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி மதிப்பெண்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 55 சதவீத்திலிருந்து 40 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகவும் மாற்றி அரசாணை வெளியிடப்படுகிறது. இதன்மூலம் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு முதல்வர் என்றுமே உறுதுணையாக இருப்பார் என்பதையும், இது சமூகநீதி காக்கும் அரசு என்பதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கின்றோம். ஆசிரியர்கள் மகிழ்ச்சியே திராவிட மாடல் அரசின் மகிழ்ச்சி.இவ்வாறு அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

Related Stories: