அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில், கிழக்குத் தொகுதி திமுக சார்பில் 2வது நாள் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மொத்தம் 1,300 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமைந்துள்ளது. இங்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது பிறந்த நாளை முன்னிட்டு கிழக்குத் தொகுதி திமுக சார்பில் கடந்த 25ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில், கிழக்குத் தொகுதி திமுக சார்பில் 2-ஆவது நாளாக இன்றும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
இந்தப் போட்டியை காலை 6.30 மணியளவில் மாநில வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், ஆர்.டி.ஓ. சங்கீதா மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, அமைச்சர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இந்த போட்டியில் மொத்தம் 1,300 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய காளைகளை வீரர்கள் லாவகமாக அடக்கினர்.
சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
