சிதம்பரம் அருகே திருவிழாவில் கன்னி சிலைகள் ஊர்வலம்: ஆற்றில் கரைத்து வழிபாடு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சி.முட்லூரில் நடந்த கன்னி திருவிழாவில் கன்னி சிலைகள் ஊர்வலமாக பெண்கள் எடுத்து சென்று ஆற்றில் கரைத்து வழிபாடு செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தில் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி கன்னித் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டும் கன்னித் திருவிழா நடந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி வரும் காணும் பொங்கல் தினத்தில், இக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் செங்கல்லுக்கு பூஜை செய்து அதை நட்டு வைத்து தினமும் படைப்பார்கள். மங்களப் பொருட்களான மஞ்சள், குங்குமம், வளையல், கண்ணாடி போன்ற பொருட்களையும் வைத்து தினமும் படையல் நடைபெறும்.

கன்னி சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். ஊர் செழிக்கவும், ஊரில் விவசாயம் பெருகவும், திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காகவும் இந்த விழா தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும். இவ்விழாவின் 9ம் நாளில் கன்னி சிலைகள் கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு தெருவின் முனையிலும் 2 கன்னி சிலைகளை வைத்து அதற்கு பல்வேறு பூஜைகள் செய்து படையல் நடத்தப்படும்.

இவ்விழாவின் நிறைவு நாளான 10ம் நாள் திருவிழாவில், இளைஞர்கள் கன்னி சிலைகளை சுமந்து ஊர்வலமாக சென்று ஆற்றில் கரைக்கும் இந்த பாரம்பரிய விழா நேற்று நடைபெற்றது. சி.முட்லூர் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தெருவின் முகப்பிலும் தலா ஒரு ஆண், ஒரு பெண் கன்னி சிலைகளை வைத்து தினமும் அதற்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
விழாவின் நிறைவு நாளான நேற்று கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் வைக்கப்பட்டிருந்த கன்னி சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலம் துவங்கியது. இதில் ஏராளமான இளைஞர்கள் பெண்கள், பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் கன்னி சிலைகளோடு ஊர்வலமாக சென்றனர்.

இளைஞர்கள் ஆட்டம் ஆடியும், பாட்டுப் பாடியும் உற்சாகமாக ஊர்வலத்தில் சென்றனர். பெண்கள் கும்மியடித்தும், பாட்டுப்பாடியும் உற்சாகமாக சென்றனர். இவ்வாறு ஒவ்வொரு தெருக்களிலும் இருந்த கன்னி சிலைகள் புறப்பட்டு அருகில் உள்ள சி.முட்லூர் வெள்ளாற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது. வெள்ளாற்றின் கரையில் சிலைகளை வைத்து அதற்கு பூஜைகள் செய்தனர். பின்னர் இளைஞர்கள் கன்னி சிலைகளை ஆற்றின் ஆழமான பகுதிக்கு எடுத்துச் சென்று கரைத்து வழிபட்டனர். இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Stories: