×

கண்ணசைவிற்கு ஏற்ப தலையாட்டும் எடுபிடிகளை வைத்து டெல்லியில் இருந்தே ஆள நினைக்கும் பாஜவுக்கு தக்க பதிலடியை தமிழ்நாடு தரும்

தஞ்சாவூர்: எந்த கெட்டப்பில் வந்தாலும் உங்களுக்கு கெட் அவுட் தான். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என தஞ்சாவூரில் நேற்று நடந்த டெல்டா மண்டல் திமுக மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நேற்று நடந்தது. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமை வகித்தார். முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார்.

மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி, ஏராளமான பொய்களை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒரு அபாண்டமான பொய்யை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். பெண்களான நீங்களே சொல்லுங்கள், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? எப்படி கூச்சமில்லாமல் பொய் பேசுகிறார் பாருங்கள். நாட்டில், இப்போது என்ன நடந்துகொண்டு இருக்கிறது. பாஜ ஆளும் மாநிலங்களில் குறிப்பாக, பாஜவினரால் பெண்கள் படும் தொல்லைகள் என்று அனைத்தையும் தெரிந்துகொண்டே தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்ப விமானத்தில் வந்துவிட்டு சென்றிருக்கிறார்.

பிரதமர் அவர்களே, ஆயிரக்கணக்கான பெண்கள் கூடியிருக்கும் இந்த மாநாட்டில் நின்றுகொண்டு, நான் தலைநிமிர்ந்து சொல்கிறேன், இந்திய மாநிலங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம், எங்கள் தமிழ்நாடுதான். அடித்து சொல்கிறேன். இங்குதான், அதிகமான பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள், அண்மையில், அவதார் என்ற குழுமம், இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு, ஆரோக்கியம், கல்வி முதலான சமூக காரணிகளில் சிறந்து விளங்கும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள். 125 நகரங்கள் கொண்ட அந்த பட்டியலில், முதல் 25 நகரங்களில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், ஈரோடு ஆகிய ஏழு நகரங்கள் இருந்தது. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

மணிப்பூரை மறந்துவிட்டீர்களா? 2023ம் ஆண்டு மே மாதம் எரிய தொடங்கிய மணிப்பூரில், இதுவரைக்கும் அரசு கணக்குப்படி, ஒருவர், இருவர் அல்ல. 260 பேர் கொல்லப்பட்டிwருக்கிறார்கள். ஆனால், உண்மையான எண்ணிக்கை இன்னும் ஒரு மடங்கு இருக்கும். 3 ஆயிரம் பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். ஒரு லட்சம் பேருக்கு மேல் மாநிலத்தை விட்டு இடம் பெயர்ந்துவிட்டார்கள். மூன்று ஆண்டுகளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும், ஒன்றியத்தை ஆள்வதும், மணிப்பூரை ஆண்டதும் பாஜதான். ஆனால், நீங்கள் டபுள் எஞ்சின் என்று ஓட்டிய டப்பா எஞ்சின், மணிப்பூர் மக்களை ஏன் காப்பாற்றவில்லை? மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் வீடு, அமைச்சர்கள் வீடு, எம்.எல்.ஏ.க்கள் வீடு, பிரேன் சிங்கின் மருமகனும் எம்எல்ஏவுமான ராஜ்குமார் இமோசிங் வீடு என்று அனைத்தையும் போராட்டக்காரர்கள் தாக்கி, தரைமட்டம் ஆக்கியிருக்கிறார்கள். ஆனால், மணிப்பூரை ஆண்ட பாஜகவால் ஏன் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை? இதுதான் பாஜவின் லட்சணமா.

பிரதமர் அவர்களே மணிப்பூரையும்,உத்திர பிரதேசத்தையும் சென்று பாருங்கள், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பாஜ ஆளும் இரண்டு மாநிலங்கள் மூலமாகத்தான் போதை பொருட்கள் பரவுகிறது என்று ஆதாரங்களுடன் செய்தி வருவதை பத்திரிகைகளில் நீங்கள் படிப்பதில்லையா? இது அனைத்தையும் மறைத்துவிட்டு, அமைதியான தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்பாதீர்கள்?
அடுத்து, தங்களுக்கு சாதகமான ஊடகங்கள் மூலமாக, ‘நரேட்டிவ் செட்’ செய்ய பிரதமர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். ஏதோ புதிதாக கூட்டணியை உருவாக்கிவிட்டது போன்று, அவரும் தோள் உயர்த்தியிருக்கிறார். தோற்ற கூட்டணியை புதுப்பித்துவிட்டு, அதற்கு பில்டப் கொடுத்திருக்கிறார்கள், அந்த கூட்டணியில் இருக்கும் அனைவருமே இடி, ஐடி, சிபிஐ என்று ஏதோ ஒரு வகையில் பாஜவிடம் சிக்கி, அந்த வாஷிங்மெஷின் தங்களையும் வெளுக்காதா என்ற நப்பாசையில் கையை கட்டி உட்கார்ந்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.ஏற்கனவே, இதே பாஜ, அதிமுக கூட்டணி, 2019 தேர்தலிலும், 2021 தேர்தலிலும் ஒன்றாக நின்று பார்த்தார்கள். தோற்று போனார்கள். அடுத்து, 2024 தேர்தலில், அதிமுகவானது பாஜ எனும் வேஸ்ட் லக்கேஜ்-ஐக் கழட்டிவிட்டு நிற்கலாம், பிறகு சேர்ந்து கொள்ளலாம் என்று மறைமுக கூட்டணியாக வந்தார்கள். ஆனால், எந்த கெட்டப்பில் வந்தாலும் உங்களுக்கு “கெட் அவுட்”தான் என்று தமிழ்நாட்டு மக்கள் திரும்ப திரும்ப சொல்லிவிட்டார்கள்.

தங்களின் கண்ணசைவிற்கு ஏற்ப தலையாட்டும் எடுபிடிகளை வைத்து கொண்டு, டெல்லியில் இருந்தே தமிழ்நாட்டையும் ஆளலாம் என்று பாஜ நினைக்கிறது. உங்களுக்கு தக்க பதிலடியை தமிழ்நாடு தரும். அதிமுக ஆட்சி என்ற பெயரில், பாஜகவின் ப்ராக்சி ஆட்சி நடந்ததையே ஏற்று கொள்ளாதவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இப்போது, வெளிப்படையாக பாஜ அரசு என்றே சொல்லி கொண்டு வந்தால், உங்களை எங்களின் எல்லைக்குள்ளேயே அனுமதிக்க மாட்டோம்.
நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மீண்டும் வெற்றியை வழங்க மக்கள் தயாராகிவிட்டார்கள். அதற்கான பரப்புரையில் ஈடுபட , வெல்லும் தமிழ்ப்பெண்களே புறப்படுங்கள். மீண்டும் இந்த ஸ்டாலின் ஆட்சி, கழக ஆட்சி, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய ஓய்வை மறந்து உழையுங்கள். உழையுங்கள்.. வெல்வோம் ஒன்றாக… வெல்வோம் ஒன்றாக.. நன்றி வணக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வரை புகழ்ந்து கவிதை நடையில் பேசிய சிறுமி
டெல்டா மகளிர் அணி மாநாட்டில் சிறுமி வர்ஷா கவிதை நடையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசி, ‘திராவிடத்திற்கு என்றும் இல்லை வறட்சி, என்றும் இருப்பது வளர்ச்சி, எழுச்சி! அதற்கு சாட்சி நம் முதல்வருடைய ஆட்சி. நாடு போற்றும் அந்த ஐந்தாண்டு, தொடரட்டும் பல்லாண்டு! மீண்டும் நீங்களே முதல்வர், மீண்டும் மீண்டும் நீங்களே முதல்வர்’ என்றார்

50 புல்லட் , 250 ஸ்கூட்டிகளில் பிரமாண்ட மகளிர் ஊர்வலம்
டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டிற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை 50 புல்லட்டுகள், 250 ஸ்கூட்டிகளில் பிரமாண்ட ஊர்வலமாக மகளிர் அணியினர் அழைத்து வந்தனர். 41 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 1.25 லட்சம் திமுக மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு பெண்கள் அனைவரும் கருப்பு, சிவப்பு சேலையில் வந்தனர். மகளிர் அணியினர் அமரும் இருக்கையில் வாட்டர் பாட்டில், பிஸ்கட், ஜூஸ், மிக்சர், இனிப்பு போன்றவைகளும் வைக்கப்பட்டு இருந்தது. மகளிர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கும் வகையில் 2,500 கிலோ ஆடு, 2,500 கிலோ கோழிக்கறியுடன் மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை, தால்சா, ஹாட் பாக்ஸ்களில் பேக் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. பிரியாணி சமைக்கும் பணி மற்றும் பேக்கிங் பணியில் சுமார் 200 பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Tags : Tamil Nadu ,BJP ,Delhi ,Thanjavur ,Chief Minister ,M.K. Stalin ,Delta Mandal DMK Women's Conference ,Chengipatta, Thanjavur ,
× RELATED புதுப்புது அடிமைகள் வந்தாலும்...