×

புதுப்புது அடிமைகள் வந்தாலும் திமுகவை தொட்டு பார்க்க முடியாது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடந்த டெல்டா மண்டல திமுக மகளிரணி மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று மோடி பேசியிருக்கிறார். மோடி அவர்களே மைக்னு நினைச்சு நீங்க கண்ணாடியை பார்த்து பேசிக்கிட்டு இருக்கீங்க. மணிப்பூரில் மிகப்பெரிய ஒரு கலவரம் நடந்தது. அங்கு பெண்களுக்கு நடந்த கொடுமையெல்லாம் நாடே பார்த்தது. 2002ம் ஆண்டு இதே பிரதமர் குஜராத் முதலமைச்சராக இருக்கும்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தினார். அதில் அதிகமாக பாதிக்கப்பட்டது பெண்கள். ஐந்து மாத கர்ப்பிணி பில்கிஸ் பானுவை சங்கி கூட்டம் பாலியல் வன்கொடுமை செய்தது. குடும்பத்தையே கொலை செய்தார்கள். அந்த கொடூரமான வழக்கில் குற்றவாளிகள் பக்கம் நின்றது பாஜ அரசு.

இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்கு போகின்ற மாநிலம் நம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கிற மாநிலங்கள் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இந்த 4 மாநிலங்களையும் ஆட்சி செய்து கொண்டிருப்பது பாஜ அரசு. பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகளை செய்துவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்து பெண்கள் ஓட்டை கேட்பதற்கு வெட்கமாக இல்லையா என்று தமிழக பெண்கள் உங்களை பார்த்து கேட்கின்றனர்.

நம்பர் ஒன் அடிமை எடப்பாடி பழனிசாமி. ஒன்றிய அரசுக்கு முட்டு கொடுத்து கொண்டிருக்கிறார். முரட்டு பக்தர் கேள்விப்பட்டிருப்பீர்கள், முரட்டு தொண்டரை பார்த்திருப்பீர்கள், ஆனால் ஒரு முரட்டு அடிமைாக நம் கண்முன் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இன்றைக்கு எப்படியாவது தமிழ்நாட்டுக்குள் நுழைந்து விடலாம் என பாசிஸ்டுகள் கனவு காண்கின்றனர். பழைய அடிமைகள் மட்டுமல்லாமல் இன்றைக்கு புதுப்புது அடிமைகளும் உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் எத்தனை பேர் கிளம்பி வரட்டும், திமுகவை தொட்டு கூடப்பார்க்க முடியாது. அதற்கு, நம்முடைய மகளிர் படை நிச்சயம் ஒரு காவல் அரணாக தமிழ்நாட்டிற்கு இருப்பார்கள்.

ஒவ்வொரு அரசுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஒன்றிய பாஜ அரசுக்கு பாசிசம்னு சொல்லுவார்கள். முன்பிருந்த அதிமுக அரசுடைய அடையாளம் அடிமை அதிமுக அரசுன்னு சொல்லுவார்கள். ஆனால், திராவிட மாடல் அரசிற்கு அடையாளம் முழுக்க முழுக்க மகளிருக்கானதாகும். அரசினுடைய சாதனைகள், திட்டங்கள், கொள்கைகளை மகளிர் நீங்கள் மக்களிடம் எடுத்து கொண்டு போய் சேர்க்க வேண்டும். நம்முடைய கனவான 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். திமுக 7வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். நம்முடைய முதல்வர் இரண்டாவது முறையாக மீண்டும் முதலமைச்சர் அரியணையில் உட்கார வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Deputy Chief Assistant Secretary ,Stalin ,Thanjavur ,Deputy Chief ,Udayaniti Stalin ,Delta Zone Dimuka Women's Conference ,Modi ,Dravita ,
× RELATED வைத்திலிங்கம் தலைமையில் இணைப்பு விழா;...