சேலம்: சேலம் மாவட்டத்திலுள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று வீரபாண்டி. தேர்தல் வரலாற்றில் இங்கு திமுக 6 முறையும், அதிமுக 8 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மையாக வன்னியர் சமூக மக்கள் வசித்தாலும் கவுண்டர், முதலியார், செட்டியார், போயர், அருந்ததியரும் கணிசமாக உள்ளனர்.
1957ல் உருவான வீரபாண்டி தொகுதியில், காங்கிரசின் கந்தசாமி முதலியார் வெற்றி பெற்றார். தொடர்ந்து 1962, 1967, 1971ல் திமுகவில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும், 1977ல் அதிமுகவில் வேங்காகவுண்டர், 1980, 1984ல் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி வெற்றி பெற்றனர். 1989ல் திமுக சார்பில் வெங்கடாசலம், 1991ல் அதிமுக சார்பில் அர்ஜூனன் வெற்றி பெற்றனர். 1996ல் திமுக சார்பில் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் வெற்றி பெற்றார். 2001ல் அதிமுகவின் எஸ்.கே.செல்வம், 2006ல் திமுக சார்பில் வீரபாண்டி ராஜா, 2011ல் அதிமுக சார்பில் எஸ்.கே.செல்வம், 2016ல் அதிமுக சார்பில் மனோன்மணி, 2021ல் அதிமுக சார்பில் ராஜமுத்து ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வரப்போகும்தேர்தலில் தே.ஜ. கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளரை நிறுத்த அக்கட்சி ஆயத்தமாகி வருகிறது. ஆனால், கூட்டணியில் உள்ள அமமுகவும் இதே தொகுதிக்கு குறி வைத்துள்ளது. அக்கட்சியின் மாநில இணைச்செயலாளர் எஸ்.கே.செல்வம் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. இவர், 4 முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு, 2 முறை வெற்றி பெற்றுள்ளார். இதனால், இந்த முறை, எஸ்.ேக.செல்வத்தை அமமுக சார்பில் வேட்பாளராக நிறுத்த டிடிவி தினகரன் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் அதிமுகவோ, 8 முறை வென்ற தொகுதியை விட்டுத்தர முடியாது என்பதில் பிடிவாதமாக உள்ளது. மாற்று முகாமிற்கு செல்ல முடிவு செய்திருந்த முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமியை இந்த முறை கட்டாயம் சீட் தருவதாக கூறி பிடித்து வைத்துள்ளார் எடப்பாடி. சிட்டிங் எம்எல்ஏ ராஜாமுத்துவும், சொந்த செலவில் பொதுக்கூட்டம் நடத்தி, எடப்பாடியை பங்கேற்க வைத்து, தனக்கே மீண்டும் தொகுதி என்று சூசகமாக உணர்த்தியுள்ளார். வேறு சில முக்கிய நிர்வாகிகளும் முட்டி மோதி வருகின்றனர்.
இப்படி தே.ஜ. கூட்டணியின் பங்காளிகள் 2 பேர் தொகுதிக்காக வீம்பு காட்டும் நிலையில், ஓசையின்றி எங்களுக்கு தான் வீரபாண்டி என்று கூறி, புகைச்சலை கிளப்பி வருகின்றனர் பாஜ நிர்வாகிகள். கட்சியின் வர்த்தகர் அணி பொறுப்பில் இருக்கும் தொழிலதிபரான ைபப் ராஜேந்திரன், பெரும் பசையுள்ள பார்ட்டி. அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர். கோட்டை போன்ற இவரது புதிய மாளிகை வீட்ைட, அண்ணாமலை தான் திறந்து வைத்தார். அவரது நிறுவனங்களில் பணியாற்றும் ஏராளமான குடும்பங்கள், இந்த தொகுதியில் உள்ளது. எடப்பாடியின் சொந்த மாவட்டத்தில் எங்களுக்கு சாதகமான முதல் தொகுதி இது. ஏற்கனவே பாஜ தனித்து நின்றும் இங்கு கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. எனவே, வீரபாண்டியை விடுவதாக இல்லை. மாவட்ட வாரியாக ஒதுக்கப்படும் தொகுதிகளில் சேலத்தில் முதலிடத்தில் இருப்பது வீரபாண்டிதான்,’’ என்கின்றனர் இங்குள்ள பாஜ மூத்த நிர்வாகிகள்.
இதே போல், மகளிரணி நிர்வாகி கொண்டலாம்பட்டி சுமதி உள்ளிட்ட பலரும், களத்தில் குதிக்க காய் நகர்த்தி வருகின்றனர். பங்காளி கட்சிகள் வீம்பு காட்டும் நிலையில், அவர்களை ஆட்டுவிக்கும் பாஜவும் மல்லுக்கட்டுவதால் தேர்தல் களத்தில் வீரபாண்டி சூட்ைட கிளப்பியுள்ளது.
