கோவை: கோவையில் போட்டியிட வாய்ப்பு பெற வேண்டி பாஜவில் உள்ள முக்கிய தலைவர்கள் முட்டி மோதி வருகின்றனர். தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளை காட்டிலும் கோவையில் தனக்கு என குறிப்பிட்ட சதவீதம் வாக்குகள் உள்ளதாக பாஜ கருதுகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் அதிக தொகுதிகளை அதிமுகவிடம் பிடுங்க நினைக்கிறது. மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் தொண்டாமுத்தூர், சூலூர் தவிர்த்த மற்ற 8 தொகுதிகளும் வேண்டும் என்று மிரட்டுகிறது.
இதைக்கேட்டு அதிர்ந்துபோன எடப்பாடியும், எஸ்.பி. வேலுமணியும் ஒரு சீட் தான் என கறாராக சொல்லிட்டாங்களாம். இதனால் கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் என 5 தாங்கன்னு பாஜ இறங்கி வந்ததாம். அதற்கும் அதிமுக தரப்பு மறுத்து, அண்ணாமலை போட்டியிடுவதாக இருந்தால், கூடுதலாக ஒரு தொகுதி தரலாம் என கூறிவிட்டதாம். இதனால் பாஜ நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், தோல்வி பயத்தால் கோவை வடக்கு தொகுதியில் போய் பணியாற்றி வருகிறார். அண்ணாமலை சிங்காநல்லூர் தொகுதியில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார். கிணத்துக்கடவு வேண்டும் என்று மாஜி கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் வசந்த ராஜன் முயற்சிக்கிறாராம். இதேபோல பாஜ மாநில விவசாயிகள் அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், சூலூர் அல்லது பல்லடம் கேட்டு அடம் பிடிக்கிறார். ஆனால் நாகராஜ் மாற்று கட்சியில் இருந்து வந்தவர், ஒரு கோஷ்டியை உருவாக்கி செயல்பட்டு வருவதால் பாஜவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகின்றது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜ மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தத்துக்கு திருப்பூரில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனாலும் அவரது சொந்த ஊரான கோவையில் போட்டியிடவே அவரும் விரும்புகிறாராம். இதேபோல மேட்டுப்பாளையம் தொகுதியில் தனது ஆதரவாளர்களில் ஒருவரை நிறுத்த ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் சீட் கேட்டு வருகிறாராம். இதுமட்டுமின்றி கோவை மாநகர மாவட்டச் செயலாளர் ரமேஷ்குமாரும் சீட் கேட்டு வருகிறாராம். பாஜ மேலிட ஆதரவை பெற்றுள்ள வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியிலும், அண்ணாமலை சிங்காநல்லூரிலும் போட்டியிட்டால், மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என தெரிகிறது. இருப்பினும் சீட் பெறுவதற்காக ஒவ்வொருவரும் தனித்தனியாக டெல்லி தலைமைக்கு தூது போய் வருகிறார்களாம். தொடர் நச்சரிப்பால் மாநில அளவிலான நிர்வாகிகளுக்கு மற்ற மாவட்டங்களில் சீட் தருவதற்கு பாஜ டெல்லி தலைமை முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கூடுதல் தொகுதிகளை மேற்கு மண்டலத்தில் ஒதுக்க வேண்டும் என பாஜ டெல்லி தலைமை எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்து வருவதால் அதிமுக தரப்பில் கடும் அதிருப்தி நிலவி வருகின்றது.
