ரெட்டிச்சாவடி, ஜன. 26: காரில் வந்து ஆடுகளை திருடிய புதுச்சேரியை சேர்ந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அடுத்த பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி(29). சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், பழனி தனது 5 ஆடுகளை மேய்ச்சலுக்காக ரெட்டிச்சாவடி சதாசிவம் நகர் அருகே உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று மேய்ச்சலுக்கு விட்டு உள்ளார். பின்னர் மாலையில், ஆடுகளை வீட்டிற்கு அழைத்து வர சென்றுள்ளார். அப்போது அங்கு ஆடுகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பழனி, ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி, கனகா, தஷ்ணாமூர்த்தி ஆகியோரின் தலா 5 ஆடுகள் என மொத்தம் 20 ஆடுகள் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, ஒரு கும்பல் காரில் வந்து ஆடுகளை திருடி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து ரெட்டிச்சாவடி சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார், நேற்று ரங்காரெட்டிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் ராம்சிங் நகரை சேர்ந்த பிரகாஷ் (36), மணவெளி சுடலை தெருவை சேர்ந்த ராஜேஷ் (38), பூரணாங்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்த சண்முகம் (38) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் கிராம பகுதியில் உள்ள ஆடுகளை திருடி விற்றால் அதிக அளவில் பணம் கிடைக்கும் என ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஆடுகளை அதன் உரிமையாளர்கள் இல்லாத நேரத்தில் காரில் வந்து திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 10 ஆடுகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் கடலூர் பகுதிகளில் ஆடுகள் திருடிய வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
