செஞ்சி, ஜன. 24: சென்னையில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு சென்ற தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரனுக்கு தேமுதிகவினர் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அங்கிருந்த தொண்டர்களிடம் விஜய பிரபாகரன் பேசுகையில், 2011ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த், சட்டமன்றத்தில் நந்தன் கால்வாய் செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு அப்போதைய அதிமுக அரசு செவிசாய்க்கவில்லை. பின்னர் பொங்கல் விழாவில் பேசிய போதும் செவிசாய்க்கவில்லை. அதற்காக விஜயகாந்த் மீது வழக்கு கூட போட்டார்கள். அதற்கு பின்னர் 2011ல் 27 எம்எல்ஏக்கள் செஞ்சியில் நந்தன் கால்வாய் நிதி ஒதுக்க வேண்டுமென போராட்டம் நடத்தினார்கள். அதற்கும் செவி சாய்க்கவில்லை.
பின்னர் விஜயகாந்த் பேசியபிறகு ரூ.13 கோடி நிதி ஒதுக்கி செலவு செய்து நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்தினார்கள். இதனால் விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரியை சேர்ந்த பல்லாயிரம் விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். இந்தத் தேர்தலில் தேமுதிக சாணக்கியனாகத்தான் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உழைத்து விட்டதுபோல இருக்காமல் இப்போது நமக்காக உழைக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். விஜய பிரபாகரன் வருவதற்கு முன்னதாக சுமார் 4 மணி நேரமாக செஞ்சியில் கூட்டு சாலையில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தொண்டர்கள் காத்திருந்தனர்.
