கெங்கவல்லி: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர், திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் முன்னாள் எம்எல்ஏ ஒருவர், அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவர் கடந்த 2011 தேர்தலில் அதிமுக சார்பில், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் இருந்து பிரிந்து, டிடிவி தினகரன் தொடங்கிய அமமுக வில் இணைந்தார். கடந்த 2021தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.
தொடர்ந்து அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது அதிமுகவில் இருந்து விலகிய மாதேஸ்வரன், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்பி முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் முன்னாள் எம்எல்ஏ மாதேஸ்வரன் திமுகவில் இணைந்தது, அதிமுக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
