திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்திற்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்பதற்காக அனுமதி இன்றி பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைத்தது தொடர்பாக பாஜவுக்கு திருவனந்தபுரம் மாநகராட்சி ரூ19.97 லட்சம் அபராதம் விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் சாலைகள் உள்பட பொது இடங்களில் பிளக்ஸ், பேனர்களை வைக்க கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை மீறி வைத்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கேரள உயர்நீதிமன்றம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி திருவனந்தபுரம் வந்தபோது விமானநிலையம் முதல் நகரில் பல பகுதிகளில் பாஜ சார்பில் அனுமதி இன்றி பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இது பொதுமக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியது. இந்நிலையில் அனுமதி இன்றி பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைத்ததற்காக திருவனந்தபுரம் மாவட்ட பாஜகவுக்கு திருவனந்தபுரம் மாநகராட்சி ரூ.19.97 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
திருவனந்தபுரம் மாநகராட்சி தற்போது பாஜ வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மாநகராட்சி மேயர் வி.வி. ராஜேஷுக்கு தெரியாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேயர் வி.வி. ராஜேஷ் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. பாஜவுக்கு, பாஜ ஆளும் திருவனந்தபுரம் மாநகராட்சியே அபராதம் விதித்துள்ளது இக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
