* சென்னையில் 7,500 போலீசார் பாதுகாப்பு
சென்னை: குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றுகிறார். நாடு முழுவதும் 77வது குடியரசு நாள் விழா 26ம் தேதி (நாளை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றி வைப்பார். தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். இதற்காக, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.
தற்போது அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், மெரினா கடற்கரை அருகே உழைப்பாளர் சிலை அமைந்துள்ள பகுதியில் குடியரசு தின விழா நடக்கிறது. அதன்படி நாளை (26ம் தேதி) காலை 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைப்பார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடிக்கு மலர் தூவவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து முப்படை வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையின் அணிவகுப்பு நிகழ்ச்சி, பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடைபெறும். அணிவகுப்பு நிகழ்ச்சிகள் முடிந்ததும் முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பார்.
பின்னர் பதக்கம், பாராட்டு சான்றிதழ் பெற்றவர்கள் அனைவரும் ஆளுநர், முதல்வருடன் நின்று குழு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். தேசியக்கொடி ஏற்றப்படும் மெரினா காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் என 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் மற்றும் துணை கமிஷனர்கள் தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சுமார் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள், மாணவர்கள் குடியரசு தின நிகழ்ச்சியை நேரில் பார்க்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தின அணி வகுப்பில் ராணுவ படை பிரிவு, தமிழ்நாடு சிறப்பு காவல், தமிழ்நாடு கமோண்டோ ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு உள்ளிட்ட வீரர்களின் கண்கவர் அணிவகுப்பும், செய்தித்துறை, காவல் துறை, கூட்டுறவு துறை, வேளாண்மை துறை, சுற்றுலா துறை உள்ளிட்ட 25 துறை சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.
