×

விபத்துகளில் சிக்காமல் இருக்க மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்

*போக்குவரத்து துணை ஆணையர் அட்வைஸ்

சிவகாசி : விதிகளை மதிப்போம் விபத்தினை தவிர்ப்போம் என சிவகாசியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு மாத விழாவில் போக்குவரத்துத்துறை துணை ஆணையர் வெங்கட்ரமணி தெரிவித்தார்.சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மாத விழா நேற்று காலை நடைபெற்றது.

வட்டார போக்குவரத்து அலுவலர் வேலுமணி தலைமை வகித்தார். வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் முன்னிலை வகித்தார். போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்வேலன் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் டிரைவர்கள், புதிதாக லைசென்ஸ் பெறுபவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். டாக்டர் அனில்குமார் கண் மருத்துவமனை சார்பாக இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக பொதுமருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் மண்டல போக்குவரத்துத் துறை துணை ஆணையர் வெங்கட்ரமணி கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசும்போது,அனைத்து போக்குவரத்து விதிகள் மற்றும் சிக்னல்களை வாகன ஓட்டிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

கார்களில் டிரைவர் மற்றும் பயணிகள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். வேக வரம்புகளை மீறாமல், பாதுகாப்பான வேகத்தில் வாகனம் ஓட்ட வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது விபத்துகளுக்கு வழிவகுக்கும். மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். முன்னால் செல்லும் வாகனத்துடன் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். சாலை விதிகளை மதித்து விபத்துகளை தவிர்ப்போம் என்றார். நிகழ்ச்சியில் அவசர சிகிச்சை 108 ஆம்புலன்ஸ் சேவை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இறுதியில் சாலை பாதுகாப்பு மாதவிழா உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Tags : Deputy Commissioner ,Traffic ,Advice ,Sivakasi ,Transport ,Venkatramani ,Road Safety Month ,Sivakasi Regional Transport Office ,
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவையில்...